தமிழ்நாடு வந்துள்ள குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவின் குன்னூர் வெல்லிங்டன் பயணம், மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
குடியரசு தலைவராக பதவியேற்றபின் முதன்முறையாக தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ள குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா மையத்திற்கு வருகை புரிந்தார்.
முன்னதாக, 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, நேற்றைய தினம் புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்த மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவரது வருகையையொட்டி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதையும் படிக்க : மதுரை வந்தடைந்தார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு...!
இதனைத்தொடர்ந்து, விமானம் மூலம் கோவை ஈஷா யோகா மையத்திற்கு வந்தடைந்த குடியரசு தலைவர், அங்கு நடைபெற்ற சிவராத்திரித் திருவிழாவில் பங்கேற்று நிகழ்வைக் கண்டுகளித்தார்.
இதனையடுத்து குன்னூர் வெலிங்டன் ராணுவப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவின் குன்னூர் வெல்லிங்டன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.