செங்கல் சூளை மண் எடுக்க அனுமதி எளிமை படுத்தப்படும்..! அமைச்சர் துரைமுருகன்...!!

செங்கல் சூளை மண் எடுக்க அனுமதி எளிமை படுத்தப்படும்..! அமைச்சர் துரைமுருகன்...!!
Published on
Updated on
1 min read

செங்கல் மற்றும் மண்பாண்டங்கள் தயாரிப்பிற்கான மண் எடுக்க அனுமதி பெறும் முறையை எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு உடனுக்குடன் அனுமதி கொடுக்க அறிவுறுத்தப்பட்டு  இருப்பதாகவும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

சட்டப் பேரவையில் செங்கல் தயாரிப்புக்கு தேவையான மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டியது குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொணடு வரப்பட்டது. தீர்மானத்தில் அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம், காங்கிரஸ் உறுப்பினர் ரூபி மனோகர் மற்றும் திமுக சார்பில் கோ.தளபதி ஆகியோர் பேசினர். அப்போது மண் எடுப்பதற்கு அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதால் இத்தொழிலை நம்பி இருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உறுப்பினர்கள் வலிறுத்தினார்கள்.

இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திமுக எதிர்கட்சியாக இருந்த போதே முதலமைச்சரிடம் மண் பாண்ட தொழிலாளர்கள் மண் எடுப்பதற்கான அனுமதி வழங்க கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் ஆட்சிக்கு வந்த பின்பு  இந்த விவகாரம் தொடர்பாக எத்தனை முறை சங்கத்துடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தி இருப்பேன் என்று கணக்கிடமுடியாது என்றார். ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதார பிரச்சினை என்பாதால் நிர்வாகிகளிடம் ஆலோசித்து சில திட்டங்களை வகுத்து இருப்பதாக கூறினார்.

மேலும்,மண்பாண்டம் செய்பவர்களுக்கு 800 மாட்டு வண்டிகள் வரை இலவசமாக மண் எடுத்துக் கொள்ளலாம். மேலும்,  60 மீட்டர் பரப்பளவு வரை உள்ள ஒரு இடத்தில் மண் எடுக்கலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சில இடங்களை சீர்திருத்தம் செய்யும் போது மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று கட்டணம் செலுத்தி மண் எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். 

தொடர்ந்து பேசுகையில், இப்படி பல வகைகளில் மண் எடுப்பதற்கு அனுமதி இருந்தாலும், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்குவதில் தான்  பிரச்சனை வருகிறது. சென்னை, செங்கல்பட்டு,  திருவள்ளூர் மாவட்டங்களில் ஆட்சியர் அனுமதி வழங்காததால் கடந்த காலங்களில் 20 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்காமல் போனது என்று நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், தற்போது இந்த மூன்று மாவட்டங்களிலும் மண் எடுக்கலாம் என்ற அனுமதி கொடுத்துள்ளதாகவும், கனிம வள கூடுதல் இயக்குனரிடம் அனுமதி கொடுத்தாலே போதும் என்ற முறையை எளிமைப்படுத்தி கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் பதிலளித்தார்

இறுதியாக, அனுமதி கோரி விண்ணப்பத்துள்ள விணணப்பங்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து, உடனுக்குடன் அனுமதி வழங்க அறிவுரைகள் வழங்கப்பட்டு இருப்பதாவும், இதனால் தமிழகத்தில் செங்கல் உற்பத்தியினை அதிகரிக்கவும் செங்கல் விலையை  கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு  இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிக்க:https://malaimurasu.com/Todays-happenings-in-the-Legislature

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com