தமிழ்நாடு முழுவதும் அனைத்து கோயில்களிலும் மூடப்பட்டிருக்கும் வடக்கு கோபுர வாசலை உடனடியாக திறக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி, திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயிலில் உள்ள மொட்டை கோபுரத்தை ஆகம விதிகளின்படி கட்ட நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆகம விதிப்படி கிழக்கு பக்கம் தான் ராஜ கோபுரம் இடம் பெற வேண்டும் எனவும், ஆனால் இந்த கோவிலில் வடக்கு பக்கம் பார்த்து கோபுரம் கட்டப்பட உள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க : "ஒன்றிய அமைச்சருக்கு" தமிழக பாஜகவினர் எதிர்ப்பு!
தொடர்ந்து அறநிலையத் துறை தரப்பில், 13 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலின் மீது படையெடுப்புகள் காரணமாக கட்டுமானங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பஞ்சரத்ன ஆகமப்படி, எந்த திசையிலும் ராஜகோபுரம் கட்டிக் கொள்ளலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளதாகவும் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் வடக்கு கோபுர வாசல் மூடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த முன்னோர்களுக்கு தெரியாத ஆகமமா இப்போது உள்ளவர்களுக்கு தெரிகிறது என்று கேள்வி எழுப்பி அனைத்து கோயில்களிலும் வடக்கு கோபுர வாசல்களை திறக்க உத்தரவிட்டனர்.