"ஒன்றிய  அமைச்சருக்கு" தமிழக பாஜகவினர் எதிர்ப்பு!

"ஒன்றிய  அமைச்சருக்கு" தமிழக பாஜகவினர் எதிர்ப்பு!
Published on
Updated on
1 min read

ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவை "ஒன்றிய அமைச்சர்" எனக் குறிப்பிட்டதால் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கணிக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் துறைமுகத்தில் மீனவர்களுடைய கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு  ஒன்றிய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, இணை அமைச்சர் எல் முருகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

நேற்று மாலை 4 மணிக்கே விழா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு 8:30 மணி அளவில் நிகழ்ச்சிக்கு வந்த ஒன்றிய அமைச்சர் மற்றும் இணை அமைச்சர் ஆகியோர்களை வரவேற்று பேசிய ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஒன்றிய அமைச்சரை குறிப்பிடும் பொழுது, “ஒன்றிய அமைச்சர்” எனக் குறிப்பிட்டதால் அங்கிருந்த பாஜக தொண்டர்கள் நவாஸ்கனிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். "அப்போது மேடையில் இருந்து கீழே இறங்கு... உனது பேச்சை நிறுத்து..."  எனவும் "மத்திய அமைச்சர் என பேசு" எனவும் ஒருமையில் பேசி கோஷமிட்டனர்.

இதனையடுத்து, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதாகல் தனது பேச்சை நவாஸ்கனி இடை நிறுத்தினார். மேலும் அங்கு கூடியிருந்த பாஜகவினர் "மத்திய அமைச்சர்" என பேச வேண்டுமென தொடர்ந்து கூச்சலிட்டனர்.

அப்போது சூழ்நிலையை புரிந்துகொண்ட ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, எம்பி நவாஸ்கனியிடமிருந்து மைக்கை வாங்கி, நான் மாலை வருவதாக இருந்த நிலையில், இரவு வரை எனக்காக காத்திருந்தற்கு நன்றி வணக்கம் என பேசி பேச்சை முடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து ஒன்றிய இணை அமைச்சர் எல் முருகன் பேசினார். மேலும், எம்பி நவாஸ்கனி, ஒன்றிய அமைச்சரை 'ஒன்றிய அமைச்சர்' என குறிப்பிட்டு பேசிய பேச்சுக்கு அங்கிருந்த பாஜக தொண்டர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, "நவாஸ்கனி ஒழிக" என கோசமிட்டபடியே இருந்தனர். இதனால் விழா சீக்கிரமே முடிந்த நிலையில், பரபரப்பான சூழ்நிலையை அறிந்த ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தனது காரிலேயே நவாஸ் கனியை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

நீண்ட நேரம் நடைபெற வேண்டிய இந்த நிகழ்ச்சி ஒன்றிய அமைச்சரை 'ஒன்றிய அமைச்சர்' என குறிப்பிட்டதற்காக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com