நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்று வரும் பாலப்பணிகளை விரைவாக முடிக்க, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் கலந்துக்கொண்டனர். இந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்று வரும் பாலப்பணிகளை விரைவாக முடிப்பதற்கு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அப்போது, ஒப்பந்ததாரர்களுக்கு தேவைப்படும் வொர்க் ஃபிரண்ட் ( Work Front) எனப்படும், நிலம் மற்றும் அடுத்தடுத்து தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள தேவைப்படும் அனுமதிகளை தாமதமின்றி வழங்கிட வழிவகை செய்ய வேண்டும் என்றும், வனத்துறையின் அனுமதி, நீர்வள ஆதாரத்துறை அனுமதி போன்ற பிற துறைகளின் அனுமதிகளை விரைந்து பெறுவதன் மூலம் காலதாமதத்தை தவிர்க்க இயலும் என்றும், டிசைன் மிக்ஸ், ஜாப் மிக்ஸ், பைல் லோடு டெஸ்ட் போன்ற ஆய்வுப் பணிகளை விரைந்து செயல்படுத்துவதன் மூலம் காலதாமதத்தை தவிர்க்க முடியும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.