சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரேஷ் உபாத்யாய் பணி ஓய்வு பெற்றார். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த நீதிபதி பரேஷ் உபாத்யாய் 1996ஆம் ஆண்டு வழக்கறிஞராக பணியை தொடங்கினார். 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குஜராத் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர் 2013ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து, 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். இன்றுடன் 62 வயது நிறைவடைவதை அடுத்து நீதிபதி பரேஷ் உபாத்யாய் ஓய்வு பெற்றார்.
இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 53 ஆக குறைந்த நிலையில் காலி இடங்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அரசு தலைமை வழக்கறிஞர் சன்முக சுந்தரம்,
சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய காலத்தில் 2,533 வழக்குகளுக்கு நீதிபதி பரேஷ் உபாத்யாய் தீர்வு கண்டுள்ளதாக கூறினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் ஏற்புரை நிகழ்த்திய நீதிபதி பரேஷ் உபாத்யாய், வாழ்க்கையின் பல பயணங்களில் ஒன்று தான், தாம் நீதிபதியாக இருந்தாகவும், தமிழகத்தில் இருந்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். ஒரு வழக்குகளில் கூட மொழி மாற்றம் செய்ய தாம் கோரவில்லை எனவும் ஆசிரியர் வைத்து தமிழ் கற்றுக்கொண்டதாக கூறினார். அந்த ஆசிரியருக்கு "நன்றி அம்மா" என தமிழில் நீதிபதி பரேஷ் உபாத்யாய் நன்றி தெரிவித்தார். மேலும், கடைநிலையில் இருக்கும் எந்த ஒரு ஏழைக்கும் நீதி கிடைப்பதற்காக, தாம் எந்த அளவுக்கும் வளைந்து கொடுக்க தயாராக இருந்ததாக கூறினார்.
இந்நிலையில் நீதிபதி பரேஷ் உபாத்யாய்-க்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ் மீது நீங்கள் வைத்திருந்த பற்றுக்கு நன்றி எனவும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பங்களிப்பு அளித்ததற்கும் நன்றி என தெரிவித்துள்ளார். மேலும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக தாங்கள் இருந்த 15 மாதங்களில் தமிழக மக்கள் பலனடைந்ததாகவும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.