கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
ஜெயக்குமார் அஞ்சலி:
கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட தவறான சிகிச்சையால் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா இன்று உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாணவியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.
கேள்வி எழுப்பிய ஜெயக்குமார்:
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், தவறான சிகிச்சையால் ஒரு சிறந்த வீராங்கனையை இழந்துள்ளதாக வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து, ‘காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு தான் முதலில் பிரியா சென்றுள்ளார். அங்கிருந்து தான் பெரியார் அரசு மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்கு வந்துள்ளார். ஆனால் தற்போது உயிரிழந்திருப்பது ராஜீவ் காந்தி மருத்துவமனையில், ஏன் முதலில் மாணவியை அனுமதிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியதோடு, மாணவியின் உயிரிழப்பிற்கு பொறுப்பற்ற மருத்துவர்களே காரணம் என்று கூறினார்.
அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும்:
ஆனால், சுகாதாரத்துறை அமைச்சர் ‘தவறு செய்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்’ என பொறுப்பின்றி பதில் கூறுகிறார். மாணவியின் உயிரிழப்பிற்குசுகாதாரத்துறை அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார்.
கண்டனம் தெரிவித்த ஜெயக்குமார்:
பிரியாவுக்கு ஏற்பட்டது சாதாரண பிரச்சனை அதற்கு கூட சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் தான் மருத்துவத்துறை இருக்கிறது. இதற்கு யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உயிரிழந்த குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், இனிமேல் இதுபோன்ற நிகழ்வு யாருக்கும் வரகூடாது எனவும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயகுமார் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
முன்னதாக, மாணவி பிரியாவின் மரணம் குறித்து பேசிய மா.சுப்பிரமணியன், பிரியாவின் மரணத்தை அரசியல் நோக்கோடு அணுகுவது அரசியல் தலைவர்களுக்கு அழகல்ல என்று கூறிய அவர், மாணவி பிரியா மரணத்தை வைத்து பதற்றமான சூழலை யாரும் ஏற்படுத்த கூடாது. சட்ட ரீதியாகவும் துறை ரீதியாகவும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்