கால் வலியால் ஏற்பட்ட உயிரிழப்பு...மாணவியின் உடலுக்கு அஞ்சலி!

கால் வலியால் ஏற்பட்ட  உயிரிழப்பு...மாணவியின் உடலுக்கு அஞ்சலி!

சென்னையில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் உடலுக்கு பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

கால்பந்தாட்ட வீராங்கனை உயிரிழப்பு:

சென்னை வியாசார்பாடியை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனையான பிரியா, பயிற்சியின் போது ஏற்பட்ட தசை பிடிப்பால் கொளத்தூர் பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அத்துடன் அங்கு அவருக்கு காலில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மீண்டும் காலில் வலி வந்ததால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியா, கால் அகற்றப்பட்ட நிலையில், ரத்த ஓட்டம் நின்றதால் சிகிச்சை பலனின்றி இன்று காலை  உயிரிழந்தார். 

நிவாரண உதவி வழங்கப்படும்:

இதைத்தொடர்ந்து, பிரியாவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பிரியாவின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்கப்படும் என்று கூறினார்.

இதையும் படிக்க: கால் அகற்றப்பட்ட கல்லூரி மாணவி மரணம்..! என்ன நடந்தது?

தர்ணாவில் ஈடுபட்ட தோழிகள்:

இதனையடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு பிரியாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.  அதற்கு முன்னதாக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் குவிந்த அவரது தோழிகள் உடலை வாங்க மறுத்து, அலட்சியமுடன் செயல்பட்ட மருத்துவர்களை கைது செய்ய வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது பேசிய காவல் துணை கண்காணிப்பாளர், பிரியாவின் உடல் கூராய்வு அறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், காவல்துறை தரப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் சென்னை காவல் துணை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உறுதியளித்தார். 

பிரியாவின் உடலுக்கு அஞ்சலி:

அதன் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் பிரியாவின் உடல் அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள், நண்பர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து, இன்று மாலை பிரியாவின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.