தொடர் மழை காரணமாக தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் பரவலான இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் கன மழை பெய்ததால் தேயிலை தோட்ட பணி முடித்துச் சென்றவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
மதுரையில் இரண்டாவது நாளாக கனமழை பெய்தது. அண்ணாநகர், ஆரப்பாளையம், ஜெய்ஹிந்த்புரம், சிம்மக்கல், தல்லாகுளம், நரிமேடு, மாட்டுத்தாவணி, அனுப்பானடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
தேனி மாவட்டம் கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இப்பகுதியில் முதல்போகம் நெல் விதைத்து அறுவடை முடிந்துள்ள நிலையில், மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தபோது கோட்டையூரைச் சேர்ந்த தப்பாட்டக் கலைஞர் வேல்முருகன் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் சுமார் 2 மணி நேரமாக வெளுத்து வாங்கிய கன மழையால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். திருவிடைமருதூர், ஆடுதுறை, திருப்பனந்தாள், தத்துவாஞ்சேரி, அணைக்கரை, பந்தநல்லூர் சுற்று வட்டார பகுதியில் மழை பெய்தது.
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக திண்டுக்கல், தேனி, மதுரை, மயிலாடுதுறைகன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.