மாண்டஸ் புயலால் உயிரிழப்பா? அரசின் இழப்பீடு எப்போது? அமைச்சர் சொல்லும் தகவல்!

மாண்டஸ் புயலால் உயிரிழப்பா? அரசின் இழப்பீடு எப்போது? அமைச்சர் சொல்லும் தகவல்!
Published on
Updated on
2 min read

மாண்டஸ் புயலில் உயிரிழந்த ஐந்து பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தெரிவித்தார்.

மாண்டஸ் புயலால் ஏற்பட்ட சேதங்கள்:

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயலின் தாக்கத்தினால் சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கடந்த 9-ம் தேதி அதிகனமழை பெய்தது. புயல், மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தபோது மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் சென்னை நகருக்குள் 70-க்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் முறிந்து சாலையில் விழுந்தன. மேலும், மின் கம்பிகள், சிக்னல் கம்பங்கள், பேனர்கள் உள்ளிட்டவையும் சாலைகளில் விழுந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 

இந்த நிலையில், சென்னை நகரின் பல இடங்களில் புயலின் தாக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை வேளச்சேரியில் உள்ள பறக்கும் ரயில் சுரங்கப்பாதையில் மழைநீர் அதிகமாக தேங்கியுள்ளது. சுரங்கத்தில் சுமார் 5 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இந்த நிலையில், தேங்கியுள்ள தண்ணீரில் சிறுவர்கள் குதியாட்டம் போட்டு வருகின்றனர். 

இதற்கிடையில், புயலின் தாக்கம் கடற்கரைகளை அதிகமாக பாதித்துள்ளது. சென்னை காசிமேட்டில் புயல் காரணமாக 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். புயல் கரையைக் கடந்தபோது வீசிய காற்றில் இழுத்துச் செல்லப்பட்ட 15 படகுகள் நீரில் மூழ்கியதாக தெரிவித்த மீனவர்கள், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதேபோல், சென்னை எண்ணூரில் கடல் சீற்றம் காரணமாக தார் சாலை காணாமல் போனதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர். எண்ணூர் தாழங்குப்பம் கடற்பகுதியில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டதால் ஏற்பட்ட அதிகப்படியான கடல் அரிப்பு காரணமாக கடற்கரை சாலையின் பெரும்பகுதி சேதம் அடைந்தது. இதனால் அந்த சாலை மணல் குவியலாக மாறியது. 

சென்னை எழும்பூரிலும் பாந்தியன் சாலையில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு எதிரில் உள்ள பெட்ரோல் பங்க் மீது ஆலமரம் வேருடன் சாய்ந்து விழுந்தது.  இதில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், பெட்ரோல் பங்கின் மேற்கூரை சேதமடைந்துள்ளது. இதையடுத்து மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மெட்ரோ ரயில் நிலையங்களிலும் புயலின் சீற்றத்தால் 3 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. அண்ணா நகர், அரும்பாக்கம், ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் வழிகாட்டி பலகைகள் உள்ளிட்ட பொருட்கள் சேதமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, வடதமிழகத்தில் நிலைகொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இது, அடுத்த சில மணி நேரங்களில் கிருஷ்ணகிரிக்கு மேற்கு திசையில் நகரும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இழப்பீடு வழங்கப்படும்:

இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் சந்தித்த அவர், மாண்டஸ் புயலின் தாக்கத்தால் 5 பேரும், 98 கால்நடைகளும் உயிரிழந்ததாகவும், காற்றின் வேகத்தால் 138 குடிசைகள் சேதமடைந்ததாகவும் கூறினார். தொடர்ந்து, புயலால் உயிரிழந்தவர்களுக்கு தலா நான்கு லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், சென்னையில் 3 பேர், காஞ்சிபுரத்தில் 2 பேர் என மொத்தம் உயிரிழந்த 5 பேருக்கு தலா  4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com