அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த அ.தி.மு.க எம்ஜிஆர் இளைஞரணியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் செந்தில் கார்த்திகேயன்...
பிளவுப்பட்ட அதிமுக:
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை தலைவிரித்தாடி வருகின்றது. கடந்த ஜூன் மாதம் ஆரம்பித்த இந்த ஒற்றை தலைமை பிரச்சனை இன்றளவும் முடிந்தபாடு இல்லை. பிளவுப்பட்டுள்ள அதிமுகவில் ஓபிஎஸ் ஒரு அணியாகவும், ஈபிஎஸ் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
பிடிவாதத்தில் ஈபிஎஸ்:
இதனிடையே, ஓபிஎஸ் ஒன்றிணைந்த அதிமுகவாக செயல்படலாம் என்று கூறி அனைவருக்கும் அழைப்பு விடுத்த போதிலும், ஈபிஎஸ் இனி ஓபிஎஸ்சுடன் சேர்ந்து செயல்படுவது என்பது நடக்காத ஒன்று என்று கூறி அடம்பிடித்து வருகிறார். இதனால் பிளவுபட்ட அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக தனது பலத்தை இழந்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அத்துடன் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலால் பெருத்த லாபம் என்பது ஆளும் கட்சியான திமுகவுக்கு தான் என்றும் கருத்து கூறுகின்றனர்.
அதிமுகவை விட்டு விலகிய நிர்வாகிகள்:
ஏனென்றால், சமீபத்தில் அதிமுக மாஜி எம்எல்ஏ ஆறுகுட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்து கொண்டனர். இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு, முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
செந்தில் கார்த்திகேயன் திமுகவில் இணைந்தார்:
இந்நிலையில் அடுத்ததாக அ.தி.மு.க எம்ஜிஆர் இளைஞரணியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் செந்தில் கார்த்திகேயன் உள்ளிட்ட கோவை மாவட்ட அதிமுக இளைஞரணி நிர்வாகிகள் தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையிலும், அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையிலும் திமுகவில் இன்று இணைந்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் கார்த்திகேயன், சிறந்த ஆட்சி நடத்தும் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தேன். திமுகவின் செயல்பாடுகள் பிடித்ததால் அதிமுகவை விட்டு விலகி திமுகவில் இணைந்ததாக கூறியுள்ளார்.
இந்த பின்னணியில், தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைவது அதிமுகவை பலவினப்படுத்தி வருவதாகவே பார்க்கப்படுகிறது என்று அரசியல் அரங்கில் கூறி வருகின்றனர்.