ஆங்கில புத்தாண்டு...வாழ்த்து தெரிவிக்கும் தலைவர்கள்...!

ஆங்கில புத்தாண்டு...வாழ்த்து தெரிவிக்கும் தலைவர்கள்...!
Published on
Updated on
1 min read

2023-ஆம் ஆண்டு பிறப்பதையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

ஆளுநரின் வாழ்த்து செய்தி:

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாட்டில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கு மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். மேலும், புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், வெற்றியை கொண்டு வரட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:

இதேபோல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்ததாகவும், உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன் மிக்கவர்களாக தமிழக இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி:

இந்த புதிய ஆண்டு பொதுமக்களுக்கு நிறைந்த வளம், நிறைந்த ஆரோக்கியத்தை வழங்கட்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இருள், சோகம் அகன்று பிரகாசமும், நம்பிக்கையும் நிறைந்ததாக அமையட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்:

நாம் கடந்து வந்த கரடுமுரடான பாதைகள் முடிந்து, இனி மலர் பாதையில் நாம் பயணிக்கப் போகிறோம் என பாம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பொருளாதாரம் வளரவும், மகிழ்ச்சி, அமைதியும் பெருகவும் நாம் கடுமையாக உழைப்போம் என்றும் ராமதாஸ் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்:

தமிழ்நாட்டின் நலன்கள், உரிமைகள் ஆகியவற்றின் மீது படிந்த இருள் விலகி, ஒளி பிறக்க ஆங்கிலப் புத்தாண்டு வகை செய்யட்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

கே.எஸ்.அழகிரி:

2024 பொதுத் தேர்தலில் மத்திய அரசை அகற்ற இந்த புத்தாண்டு ஒரு தொடக்கமாக அமையட்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

வைகோ:

ஜனநாயகத்தின் அடித்தளத்தையே தகர்த்திட அதிகாரத்தை பயன்படுத்தும் மத்திய அரசுக்கு எதிராக, மாநில சுயாட்சியை காக்க இந்த ஆங்கில புத்தாண்டில் சபதம் ஏற்போம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

சரத்குமார்:

புதிய கனவு, புதிய சிந்தனையுடன் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் அனைவரும், காலம் முன்னிறுத்தும் கடமையினை இந்த புத்தாண்டில் செவ்வனே நிறைவேற்றுவோம் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவ்வாறு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com