5வது நாள் போராட்டம்: கடலில் பேனா வைப்பதற்கு நிதி உள்ளது; ஊதியம் வழங்க நிதி இல்லையா?டிடிவி ஆவேசம்!

5வது நாள் போராட்டம்: கடலில் பேனா வைப்பதற்கு நிதி உள்ளது; ஊதியம் வழங்க நிதி இல்லையா?டிடிவி ஆவேசம்!
Published on
Updated on
2 min read

'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி பசி பட்டினியுடன் போராடும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைளை தமிழக அரசு நிறைவேற்றாதது வருத்தம் அளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிதி தினகரன் தெரிவித்துள்ளார். 

'சம வேலைக்கு சம ஊதியம்':

தமிழக அரசு பள்ளிகளில் 2009-ஆம் ஆண்டு மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட்டதால் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

மயங்கி விழும் ஆசிரியர்கள்:

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 3000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களில் 160 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சரிவர உணவு உட்கொள்ளாததால் வாந்தி மயக்கம் என பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்று நடைபெற்று வரும் ஊதிய உயர்வு போராட்டத்தில், காலையிலிருந்து 15 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டிடிவி விமர்சனம்:

இந்நிலையில் 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை கேட்பதற்காக அமமுக கட்சியின் பொதுச்செயலாளர், டிடிவி தினகரன் போராட்டம் நடக்கும் இடத்திற்கு வருகை புரிந்து, ஆசிரியர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் போராட்டக்காரர்களுக்கு நம்பிக்கை வார்த்தை தெரிவித்த டிடிவி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆசிரியர்களின் போராட்டத்தை இந்த அளவிற்கு விட்டு இருக்க கூடாது, எதிர்கட்சியாக இருந்த போது ஒரு வாக்குறுதியை கொடுத்துவிட்டு தற்போது அதை கண்டு கொள்ளாமல் இருப்பது நியாயம் இல்லை என்று கூறினார்.

அரசாங்கம் மீதும், ஜனநாயகம் மீதும் நம்பிக்கை இல்லாமல் போய்விடும்:

'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி பசி பட்டினியுடன் போராடும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைளை தமிழக அரசு நிறைவேற்றாதது வருத்தம் அளிப்பதாகவும், மக்களை ஏமாற்றுவது தான் அரசின் கொள்கையாக இருந்தால் மக்களுக்கு அரசாங்கம் மீதும், ஜனநாயகம் மீதும் நம்பிக்கை இல்லாமல் போய்விடும் என்று டிடிவி எச்சரித்தார்.

கடலில் பேனா வைப்பதற்கு நிதி இருக்கிறதா?:

தொடர்ந்து பேசிய அவர், கடலில் பேனா வைப்பதற்கு நிதி இருக்கிறது, ஆனால் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் நிதி பற்றாக்குறை ஏற்படுகிறதா? பேனா வைப்பதற்கு பயன்படுத்தும் பணத்தை ஆசிரியர்களுக்கு செலவிடக்கூடாதா ? என்று தமிழக அரசை அமமுக பொதுச்செயலாளர் டிடிதி தினகரன்  கடுமையாக விமர்சித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com