"ED அதிகாரி கைது செய்யப்பட்டதை அரசியலாக்கக் கூடாது" - அண்ணாமலை

Published on
Updated on
1 min read

அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டதை அரசியலாக்கக் கூடாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கன்னியாகுமரியில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை,சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமலாக்கத் துறை அதிகாரி கைது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த பாஜக தலைவர் அண்ணாமலை, அமலாக்கத்துறையில் இது போன்று பலர் கைதாகி இருக்கிறார்கள் என்றும், அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டதை அரசியலாக்கக் கூடாது என்றும் கூறினார். ஒரு மனிதன் தவறு செய்ததற்காக அமலாக்கத்துறையே மோசம் என கூற முடியாது என்றும், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல் துறை நேர்மையாக அணுக வேண்டும் என்றார். இதில் சிபிஐ, தமிழ்நாடு காவல் துறை என அனைவரும் தலையிட வேண்டியது இல்லை என்று கூறிய அண்ணாமலை,  மெச்சூரிட்டி இல்லாத அரசியல்வாதிகளை வைத்து தமிழ்நாடு வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறினார்.  

சென்னை மழையை பொறுத்தவரையில் கருணாநிதி காலத்தில் இருந்து தற்போது வரை மழைநீரில் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு நடப்பதாக விமர்சித்தார். தற்போது ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் பேண்டை தூக்கிக்கொண்டு நடந்து செல்கிறார், அடுத்து அவருடைய மகன் நடந்து போவார் என்று கூறினார். சென்னை திமுகவின் கோட்டை என்று கூறும் திமுக, சென்னை மக்களுக்கு பெரும் துயரத்தை மட்டுமே ஒவ்வொரு மழைக்காலத்திலும் கொடுத்திருக்கிறது என்று குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தை உலகத் திறமை வாய்ந்த நிபுணர்களைக் கொண்டு கையாள வேண்டும் என்று தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com