லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி...மதுரையில் நடக்கும் தொடர் சோதனை!

திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாாி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 14 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை  சோதனை நிறைவு பெற்றது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளராக உள்ள மருத்துவா் சுரேஷ் பாபு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, சுரேஷ் பாபு மீதான வழக்கு அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்படுவதாக கூறி, அதிலிருந்து விடுவிக்க 51 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதில் முதற்கட்டமாக சுரேஷ் பாபு 20 லட்ச ரூபாயை கொடுத்த நிலையில் மீதி தொகையையும் கேட்டுள்ளார். 

இதுகுறித்து சுரேஷ் பாபு லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், அங்கித் திவாரியை கொடைரோடு அருகே மடக்கிப் பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் 15 மணி நேரம் விசாரணை நடத்தி, நீதிபதி மோகனா முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது, அவரை வரும் 15-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, மதுரையில் உள்ள அமலாக்கத்துறை  துணை மண்டல அலுவலகத்தில் சோதனை நடத்த சென்ற போது அமலாக்கத் துறை ஊழியர்களுக்கும் அவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் சட்டம் ஒழுங்கு போலீசாரை வரவழைத்து அவர்கள் பாதுகாப்புடன்  சோதனை மேற்கொண்டனர். அங்கித் திவாரியின் அறையில் உள்ள கணினி, அவர் கையாண்ட வழக்குகள் தொடர்பான ஆவணங்கள், மடிக்கணினி, மின்னஞ்சல்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அவரது வங்கிப் பரிமாற்றம் குறித்தும் அவரை கைபேசியில் தொடர்பு கொண்டவர்கள் குறித்தும் விவரங்களை சேகரித்தனர். 14 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் 3 லேப்டாப்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பாதுகாப்புக்காக கோயம்புத்தூரில் வந்த சிஆர்பிஎப் படை வீரர்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் 7 மணி நேரத்திற்கும் மேலாக வெளியில் காத்திருந்தனர்.

மேலும், மதுரையை தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலும் சோதனை  மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு 15-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.