தூத்துக்குடி தொகுதியில் திமுக எம்.பி.கனிமொழியின் வெற்றி செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்ற நிலையில், அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தூத்துக்குடியை சேர்ந்த சந்தானகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், தனக்கு எதிரான தேர்தல் வழக்கையும் ரத்து செய்யக்கோரி கனிமொழி தரப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அஜய் ரஸ்தோகி, பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது. தொடர்ந்து இந்த வழக்கானது, கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, கனிமொழி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.வில்சன், சொத்துக்களை வெளிப்படுத்தும் பிரமாணப் பத்திரத்தில் தனது கணவரின் பான் விவரங்களைக் குறிப்பிடாதது குறித்த குறையை எழுப்பி, ஒரு வாக்காளர் தாக்கல் செய்துள்ளார் எனவும், நிரந்தர கணக்கு என் என்பது இந்தியாவில் தான் உள்ளதே தவிர சிங்கப்பூரில் அல்ல. ஆவண உண்மை இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வாதங்களை முன்வைத்தார். இருதரப்பு வாதஙளுக்கு பிறகு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தூத்துக்குடி தொகுதியில் திமுக எம்.பி.கனிமொழியின் வெற்றியை எதிர்த்து சந்தானகுமார் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, திமுக எம்.பி.கனிமொழியின் வெற்றி செல்லும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.