”இயல்பான மழை அளவை விட 6 சதவீதம் அதிகம்” தென்மேற்கு பருவமழை குறித்து பாலச்சந்திரன் தகவல்!

”இயல்பான மழை அளவை விட 6 சதவீதம் அதிகம்” தென்மேற்கு பருவமழை குறித்து பாலச்சந்திரன் தகவல்!
Published on
Updated on
1 min read

தென்மேற்கு பருவமழை பொறுத்த வரையில் இந்த ஆண்டு இயல்பான மழை அளவை விட ஆறு சதவீதம் அதிகமாக ஜூன் 1 தேதியிலிருந்து தற்போது வரை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மேற்கு திசை காற்றும், தென்மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி வடதமிழகம் பகுதியில் நிலவுகிறது. வளிமண்டலத்தின் கீழ் அடுக்கிற்கும் மேல் அடுக்கிற்கும் இடையிலான நிலைத் தன்மை குறைந்து இடி மழைக் கூட்டங்கள் உருவாகி மேற்கில் இருந்து கிழக்காக நகர்ந்து கடற்பகுதி அருகே வலுப்பெற்றது. 

இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகப்பட்சமாக ஜமீன் கொரட்டூரில் 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தொடர்ந்து பேசியவர், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறினார். சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் அடுத்த 2 தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என கூறினார். 

தென்மேற்கு பருவமழை பொறுத்த வரையிலும் ஜூன் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் 162 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழை அளவு 153 மில்லிமீட்டரை விட  6  சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com