ஜேஇஇ தேர்வு...சிக்கலில் தமிழக மாணவர்கள்...உறுதியளித்த அன்பில் மகேஷ்!

ஜேஇஇ தேர்வு...சிக்கலில் தமிழக மாணவர்கள்...உறுதியளித்த அன்பில் மகேஷ்!
Published on
Updated on
1 min read

தமிழக மாணவர்கள் JEE தேர்வு எழுதுவதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தேசிய தேர்வு முகமையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜே இ இ முதல்நிலைத் தேர்வு:

ஜே இ இ முதல்நிலைத் தேர்வு ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கிய ஜே இ இ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆனால், ஜே இ இ நுழைவு தேர்வுக்கான விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் தமிழக மாணவர்கள்  தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மதிப்பெண்கள் இல்லை:

ஏனென்றால், இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா சூழலில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள். மேலும் 2020 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மதிப்பெண்கள் ஏதும் வழங்கப்படாமல் தேர்ச்சி என்று சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு முகமை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை:

எனவே, தமிழக மாணவர்கள் ஜே இ இ தேர்வை எழுதும் வகையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை உள்ளீடு செய்வதிலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு கோரி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அன்பில் மகேஷ் உறுதி:

இந்நிலையில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை உள்ளீடு செய்வதிலிருந்து விலக்கு பெறப்பட்டு தமிழக மாணவர்கள் ஜேஇஇ தேர்வு எழுத உரிய தீர்வு காணப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியளித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com