கருணாநிதியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2022 - 23ம் ஆண்டில் 2544 கிராமங்களில் மேம்பாட்டு திட்டப் பணிகள் நடைபெற உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் மாநில அளவில் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 18 துறைகளைச் சேர்ந்த முதன்மைச் செயலாளர்கள் குழுவின் உறுப்பினர்களாக நியமனமிக்கப்பட்டுள்ளனர்.
சிறு கிராமங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் பிரதான நோக்கமாகும். தமிழகத்தின் கிராம ஊராட்சிகளில் கான்கிரீட் சாலை, தெரு விளக்குகள், குளம், இடுகாடு, சுடுகாடு, குடிநீர், விளையாட்டு, கிராம அங்காடிகள், நூலகங்கள் என பல்வேறு அடிப்படை கட்டமைப்புப் பணிகளை அந்தந்த ஊராட்சிகளே செய்வதற்கான திட்டம்தான் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் நோக்கமாகும்.
பள்ளிகள், நூலகங்கள், மருத்துவமனைகள், நியாய விலைக் கடைகள், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட அனைத்தும் மேம்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.