குளித்தலை கோயிலில் திருடப்பட்ட உண்டியல்... புதரில் வீசிய மர்ம நபர்கள்!!

குளித்தலை கோயிலில் திருடப்பட்ட உண்டியல்... புதரில் வீசிய மர்ம நபர்கள்!!

குளித்தலை அருகே குள்ளம்பட்டி முத்தாலம்மன் கோவிலில் மர்ம நபர்கள் உண்டியலை திருடி ரூபாய் 75000 பணத்தை கொள்ளை அடித்து உண்டியலை புதரில் வீசி சென்றுள்ளனர்.

பூட்டை உடைத்து:

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குள்ளம்பட்டியில் ஸ்ரீ முத்தாலம்மன் விநாயகர் கோவில் அமைந்துள்ளது.  நேற்று இரவு இக்கோவிலின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து கோவிலினுள் இருந்த உண்டியலை திருடிச் சென்றுள்ளனர்.

அதிர்ச்சியடைந்த மக்கள்:

இன்று காலை கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் கோவிலினுள் சென்று பார்த்தபோது பெரிய உண்டியல் திருடப்பட்டது தெரியவந்தது.  திருடப்பட்ட உண்டியலை தேடியபோது உண்டியலை எடுத்துச் சென்ற மர்ம நபர்கள் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தரிசு நிலப் பகுதியில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியலை புதரின் அருகே வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது.

வீசப்பட்ட உண்டியல்:

பணம் திருடப்பட்டு வெறும் உண்டியலை மட்டும் கண்டுபிடித்த பொதுமக்கள் தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  அதன் பேரில் தோகைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் உண்டியலில் இருந்து ரூபாய் 75 ஆயிரம் பணத்தினை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

தொடரும் சம்பவம்:

மர்ம நபர்கள் கோவிலில் பூட்டை உடைத்து உண்டியலை எடுத்துச் சென்று பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மேலும் இப்பகுதியில் உள்ள கோவில்களில் அடிக்கடி உண்டியல் உடைத்து பணம் திருடப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க:   கொடைக்கானலில் பூத்து குலுங்கும் தீ தடுப்பு மலர்கள்...!!!