தவாங் மக்கள் இந்திய ராணுவத்தின் வீரத்திற்கு தலைவணங்குகிறார்கள். இந்திய ராணுவத்தால் தான் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் எனவும் அவர்கள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது எனவும் கூறியுள்ளனர். இதற்கு முன்பாக டிசம்பர் 09 அன்று தவாங்கின் யாங்சே பகுதியில் சீனாவின் அத்துமீறலை இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்தனர்.
மக்களின் நம்பிக்கை:
நகர எல்லையின் வளிமண்டலம் மிகவும் நன்றாக இருக்கிறது எனவும் மோதலுக்குப் பிறகு நாங்கள் எந்த பிரச்சனையையும் சந்திக்கவில்லை எனவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். தவாங் பகுதியின் உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், “தவாங்கின் வளிமண்டலம் இப்போதும் மிகவும் நன்றாக உள்ளது. இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே எல்லையில் சண்டை நடந்ததாக கேள்விப்பட்டோம், ஆனால் இந்திய ராணுவம் இருப்பதால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.” எனக் கூறினார்.
மேலும், ”இப்பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அரசு செய்து வருகிறது. எதிர்காலத்தில் இந்திய ராணுவத்துக்குத் தொடர்ந்து ஆதரவு அளிப்போம்” எனவும் அவர் தெரிவித்தார். மற்றொருவர் பேசுகையில், ”நாங்கள் இந்தியர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.” எனக் கூறினார்.
திபெத்தியர்கள் போராட்டம்:
தர்மசாலாவில் சீனாவுக்கு எதிராக திபெத்தியர்கள் போராட்டம் நடத்தினர். சீனாவின் ஊடுருவலுக்கு எதிராக திபெத்திய மக்கள் ஒன்றாக இணைந்து மக்லியோட்கஞ்ச் நகரின் பிரதான சதுக்கத்தில் போராடினர்.
லடாக் முதல் அருணாச்சல பிரதேசம் வரையிலான எல்லையில் சீனாவின் அத்துமீறலுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில், சீனாவின் அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்த இந்திய ராணுவ வீரர்களுக்கும் அவர்கள் மரியாதை செலுத்தினர்.
-நப்பசலையார்