மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா எதிர்கட்சியினர் முதன் முதலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அரசை வீழ்த்த வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மாபெரும் கூட்டத்தை நடத்தினர். பாட்னா மற்றும் பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டணி கூட்டத்தில், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட 26 கட்சிகள் சேர்ந்து Indian National Devolopmental Inclusive Alliance என்ற I.N.D.I.A எதிர்கட்சிக் கூட்டமைப்பை நிறுவினர்.
இந்நிலையில் மல்லிகார்ஜூன கார்கே, ஜோதிமணி, சுப்ரியா சூலே உள்ளிட்டோரின் பங்கேற்புடன், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நாடாளுமன்றத்தில் பதிலளிக்கக் கோரி I.N.D.I.A எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரத்தில் ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்கத்தில் பெண்கள் பாதுகாப்பு கோரி பாஜகவினரும் போட்டி போட்டுக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த 20 ஆம் தேதி தொடங்கப்பட்ட நாடாளுமன்ற மழைக்காலக்கூட்ட தொடர் ஏற்கனவே இரண்டு நாள் முடங்கியதை அடுத்து, இன்று மீண்டும் தொடங்கிய நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் எதிர்க்கட்சியினரின் போராட்டத்தால் முடங்கியது.