சென்னை மற்றும் புதுச்சேரி துறைமுகங்கள் இடையேயான சரக்கு போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் சென்னை துறைமுகம் மற்றும் புதுச்சேரி துறைமுகத்துக்கு இடையேயான சரக்கு போக்குவரத்து வாரத்திற்கு இரண்டு முறை எடுத்துச் செல்லும் சேவையை சென்னை துறைமுகம் கழகத்தின் தலைவர் சுனில் பாலிவால் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடல் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும் சாலை மார்க்கமாக எடுத்து வரும் சரக்கு பெட்டகங்களால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பு மற்றும் மாசுவை பெரிதளவில் குறைக்க இந்த திட்டம் உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலமாக புதுச்சேரியில் இருந்து சாலை மார்க்கமாக ஒரு சரக்கு பெட்டகத்திற்கு நான்காயிரம் ரூபாய் வரை செலவு செய்ய நேரிட்ட நிலையில் தற்போது அவை இரண்டாயிரத்து ஐநூறாக ரூபாயாக குறையும் எனவும் அத்தோடு மதுரவாயில் மற்றும் சென்னை துறைமுகம் இடையேயான ஈரடுக்கு மேம்பாலம் தொடர்பாக பேசிய சுனில் பயில்வால் மேம்பால திட்டத்திற்கான CRZ கிளியரன்ஸ் மற்றும் ரயில்வே துறையின் ஒப்புதல் பெறப்பட்டு விட்டதாகவும் வரும் ஏப்ரல் மாதத்திற்குள்ளாக டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்கபடும் எனவும் கூறியுள்ளார்.