”தந்தை இறந்த பிறகு....” சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி நெகிழ்ச்சி பேச்சு!!

”தந்தை இறந்த பிறகு....” சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி நெகிழ்ச்சி பேச்சு!!
Published on
Updated on
1 min read

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வி.லட்சுமிநாராயணன் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.  சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

புதிய நீதிபதியாக பதவியேற்றுக் கொண்ட லட்சுமி நாராயணனை, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வரவேற்று பேசினர்.

ஏற்புரையாற்றிய நீதிபதி வி.லட்சுமிநாராயணன், சட்டம் படிக்கத் துவங்கிய போது தந்தை இறந்து விட்டதால், தாய் தான் தன்னை ஆளாக்கியதாகவும், சகோதரர் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, தந்தை இல்லை என்ற குறை தெரியாமல் பார்த்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.  நீதிபதியாக பொறுப்பேற்றது சாதனையல்ல எனவும், அதையும் தாண்டியது எனவும் குறிப்பிட்டார்.

கடந்த 1970ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி வழக்கறிஞர் வெங்கடாச்சாரி - சரோஜா தம்பதிக்கு மகனாக பிறந்த லட்சுமி நாராயணன், புரசைவாக்கம் எம்.சி டி.முத்தையா செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பும், வைஷ்ணவ் கல்லூரியில் பட்டப்படிப்பும், பெங்களூருவில் உள்ள தேசிய சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பும் முடித்துள்ளார்.

கடந்த 1995ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்த அவர், கடந்த 30 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், தீர்ப்பாயங்களில் ஆஜரானதுடன், சட்டம் பற்றி 350 கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

தற்போது நீதிபதி வி.லட்சுமி நாராயணனுடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.  அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில்,  17 பணியிடங்கள் காலியாக உள்ளன.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com