இது ஒரு சிறிய விஷயம். இங்கு மத்திய அரசு ஆம் அல்லது இல்லை என்று மட்டுமே கூற வேண்டும். எதற்காக இத்தனை கால அவகாசம் எனப் புரியவில்லை.
தமிழகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ராமசேதுவை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு பதிலளிக்க மத்திய அரசு கால அவகாசம் கேட்டபோது, உச்ச நீதிமன்றம் இன்று 4 வார கால அவகாசம் அளித்துள்ளது.
தமிழகத்தில் ராமேஸ்வரம் கடலின் அருகே அமைந்துள்ள ராமசேது பாலம் ஆடம்ஸ் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பாலம் இலங்கை செல்வதற்காக ராமரால் கட்டப்பட்டது என்று புராண மற்றும் மத நம்பிக்கை உள்ளது.
ராவணன் சீதையைக் கடத்தி இலங்கைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு செல்வதற்காக இந்தப் பாலம் கட்டப்பட்டது என புராணக் கதைகள் கூறுகின்றன. அதன் எச்சங்கள் இன்றும் அங்கே காணப்படுகின்றன.
பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட சேது சமுத்திரம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
சேது சமுத்திரம் திட்டத்திற்கு முற்று வைக்கும் விதமாக ராமர் பாலத்தை பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்க வழக்கு தொடர்ந்தார். 2007-ல் ராமர் சேது திட்டத்துக்கான பணிகளுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
இந்தத் திட்டத்தின் "சமூக-பொருளாதார பாதகத்தை" கருத்தில் கொண்டதாகவும், ராமர் சேதுவை சேதப்படுத்தாமல் சேதுசமுத்திரத் திட்டத்திற்கு வேறு பாதையை ஆராயத் தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு அப்போது உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள பாஜக மற்றும் அதன் கூட்டணி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் இந்து அமைப்புகளும் அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஹிமா கோஹ்லி மற்றும் நீதிபதி ஜே.பி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சுப்பிரமணியன் சுவாமி, இது ஒரு சிறிய விஷயம், இதில் மத்திய அரசு ஆம் அல்லது இல்லை என்று மட்டுமே கூற வேண்டும் எனவும் எதற்காக மூன்று நாள் கால அவகாசம் எனவும் கேள்வியெழுப்பினார்.
இது குறித்து, மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், பிரமாணப் பத்திரம் தயாராக உள்ளது என்றும் அதற்கு அமைச்சகத்திடம் இருந்து உத்தரவு பெற வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் பதிலளித்தார்.
வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டபோது, அமர்வு எதற்காக இவ்வளவு கால அவகாசம் எனக் கேள்வியெழுப்பியது.