மோர்பி தொங்கு பாலம் விபத்து உலகம் முழுவதும் அதிர்ச்சி அலையை எழுப்பியுள்ளது. இது விபத்து என்பதை தாண்டி திட்டமிடப்பட்ட சதி எனவும் ஒருசாரார் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
அதனோடு அரசு அதிகாரிகளி அலட்சிய போக்கால் இந்த விபத்து நடந்துள்ளதாகவும் மக்களிடையே விமர்சனம் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் இது தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோர்பி தொங்கு பாலம் விபத்து தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். “இது மிகவும் தீவிரமான அலட்சியப் போக்கு. இந்த விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். யாருடைய அலட்சியத்தால் இத்தனை பேர் உயிர் இழந்தார்கள் என்பதை அறிய வேண்டும். தனது அனுமதியின்றி பாலம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். யாருடைய அனுமதியின் பேரில் இந்த பாலம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது என்பது தெரிய வேண்டும்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
மேலும், பாலத்தில் அதிக அளவில் மக்கள் இருப்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ”கடந்த ஐந்து நாட்களில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு சென்று வந்ததாக தெரிகிறது. இந்த பாலம் நூறு பேரை மட்டுமே சுமக்கும் திறன் கொண்டது என்றும் கூறப்படுகிறது. இவ்வாறான நிலையில், இவ்வளவு மக்கள் எவ்வாறு அங்கு சென்றார்கள். அந்த நேரத்தில் நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது. விபத்துக்கான தெளிவான பொறுப்பு இதுவரை இல்லாதது வியப்பளிக்கிறது.” எனவும் தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி.