வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் தலைநகரே வெள்ளக்காடாகியுள்ள நிலையில், அசாம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆயிரக்கணக்கானோர் இடமாற்றப்பட்டுள்ளனர்.
டெல்லியில் கனமழை முடிந்து 3 நாட்கள் கடந்தும், யமுனா ஆற்றின் அளவு 207ஐ விடக் குறையாததால், கரையோர கிராமங்கள் அனைத்தும் வெள்ள பாதிப்பில் இருந்து மீள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்திற்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
அசாமில் பிரம்மபுத்திரா உள்ளிட்ட ஆறுகள் கரைபுரண்டோடுவதால், 17 மாவட்டங்களில் 67 ஆயிரம் பேர் இடமாற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து குறிச்சி அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால், கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வலியுறுத்தியுள்ளார்.
சிக்கிமின் இந்தியா - சீனா எல்லையான நாது லால் பாஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தின் அலிபுர்தூரில் கல்ஜானி ஆற்று வெள்ளத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த நிகழ்வும் அரங்கேறியது. வங்கத்தின் வடக்குப்பகுதி மற்றும் சிக்கிம் மாநிலத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் லக்கிம்பூர் கேரி, பெரெய்லி உள்ளிட்ட 40 மாவட்டங்களில், 20ம் தேதி வரை கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாசலப்பிரதேசத்தின் மணாலி, மண்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடரும் நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு 7 மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.