உலகம் முழுவதிலும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பிங்க் மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதனையொட்டி, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள mgm தனியார் புற்றுநோய் மருத்துவமனை சார்பாக 'மார்பக புற்றுநோய்' விழிப்புணர்வு வாக்கத்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நுங்கம்பாக்கம் முதல் அண்ணாநகர் டவர் பூங்கா வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியை அண்ணாநகர் துணை காவல் ஆணையர் விஜய குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
'மார்பக புற்றுநோயில் இருந்து விலகி இருப்போம், ஒன்றாக இணைந்து மார்பக புற்றுநோயை தடுப்போம்' என்பதை மையமாக வைத்து நடைப்பெற்ற இப்பேரணியில் அதிகளவிலான பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த புற்றுநோய் சேவைகளின் மருத்துவ ஆலோசனை வாரியத்தின் தலைவர் டாக்டர் எம்.ஏ.ராஜா, எம்.ஜி.எம். மருத்துவமனை எப்போதும் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஊக்கமளித்து இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகுந்த ஆதரவை வழங்கி வருகிறது.
சமுதாயத்தில் புற்றுநோய் ஏற்படுத்தும் பாதிப்பை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். பெண்கள் மார்பக புற்றுநோய் குறித்து அறிந்து கொள்ளவும், அதன் மூலம் போதிய விழிப்புணர்வை பெற்று முன்னெச்சரிக்கையுடன் இருப்பதே இந்த வாக்கத்தான் விழிப்புணர்வின் நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.