கன்னியாகுமரி | நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர், தனியார் நிறுவன மேலாளர் சந்தோஷ் கோஷி. இவர் பூதப்பாண்டிக்கு காரில் சென்ற போது வடசேரி பகுதியில் வைத்து கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த ஆசிப் என்பவர் சாலையோரம் நின்று கொண்டு காரில் லிஃப்ட் கேட்டார். உடனே சந்தோஷ் கோஷியும் காரை நிறுத்தி ஆசிப்பை காரில் ஏற்றினார்.
காரில் இருந்தபடி ஆசிஃப் தனது நண்பா்களுக்கு போன் செய்து பேசிக் கொண்டே, இறச்சகுளம் பகுதியில் கார் வந்ததும் இறங்கினார். அப்போது ஆசிப்பின் நண்பர்கள் கிருஷ்ணன் கோவில் மாகின் மற்றும் சமீர், அவரது தம்பி நசீர் ஆகிய 3 பேரும் சேர்ந்து சந்தோஷ் கோஷியின் கழுத்தில் கடந்த இரண்டே கால் (2.25) சவரன் நகையை கத்தியை காட்டி மிரட்டி பறித்தனர்.
மேலும் படிக்க | தூங்கிக் கொண்டிருந்த ஆசிரியை வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை...
மேலும், சந்தோஷ் கோஷியின் செல்போனில் உள்ள கூகுள்-பே மூலம் ரூ.73 ஆயிரத்தையும் தனக்கு அனுப்பி கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுபற்றி அவர் பூதப்பாண்டி போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்து வந்த 4 பேரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் சகோதரர்களான சமீர், நசீர் ஆகியோர் வடசேரி பகுதியில் நிற்பதாக பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் கிருஷண்ன்கோவில் பகுதியில் வைத்து சமீர், நசீர் ஆகியோரை மடக்கி பிடித்தனர். பின்னர் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். கைதான அண்ணன், தம்பியிடம் இருந்து நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை போலீசார் மீட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை தேடிவருகின்றனர்.