செஞ்சியில் தொடரும் வாகனத் திருட்டு... கண்டுகொள்ளாத போலீசார்..

செஞ்சி நகரில் முக்கிய வீதிகளில் நாள்தோறும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் திருடு போகின்றன. சி.சி.டி.வி. கேமராவையும் ஒரு பொருட்டாக கருதாத திருடர்களை போலீசார் விட்டு வைப்பது ஏன்?
செஞ்சியில் தொடரும் வாகனத் திருட்டு...  கண்டுகொள்ளாத போலீசார்..
Published on
Updated on
1 min read

விழுப்புரம் : செஞ்சி நகர் பகுதியில் உள்ள நான்குமுனை சந்திப்பு மற்றும் முக்கிய வீதிகளில் நாள்தோறும் இருசக்கர வாகனங்கள் திருடப்படுவது வாடிக்கையாகி வருகிறது. 

திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டிவனம், மேல்களவாய் ஆகிய சாலைகள் ஆகிய பகுதிகளில்தான் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இரவு நேரங்களில் வீதியில் சர்வசாதாரணமாக உலா வரும் திருடர்கள், இருசக்கர வாகனத்தை சத்தமில்லாமல் நகர்த்தி செல்வது சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளன. 

வீதியில் உலா வரும் திருட்டு ஆசாமிகள் :

இந்த வாகனத்திருட்டு குறித்து பாதிக்கப்பட்டவர்கள் செஞ்சி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தாலும் போலீசார் புகாரை மட்டும்தான் பெற்றுக் கொள்கிறார்களே தவிர, திருடர்களை பிடிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியதாகவே தெரியவில்லை.

வாகனத் திருட்டில் ஈடுபடும் மர்மநபர்களுக்கு போலீசாரும் மறைமுகமாக உதவி புரிகிறார்களோ? என்ற சந்தேகம் கலந்த அச்சமும் மக்களை தொற்றிக் கொண்டுள்ளது. 

பிரயோஜனம் இல்லா மூன்றாம் கண் :

மூன்றாம் கண் என்று சொல்லப்படும் சி.சி.டி.வி. காட்சியை வைத்தாவது போலீசார் இந்த வாகனத்திருட்டு தொடர்புடைய நபர்களை எளிதில் கண்டுபிடிக்கலாம் என்றாலும், அவர்களை இதுவரையிலும் கண்டும் காணாமல் போவதுதான் மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கெனவே செஞ்சி பகுதியில் வழிப்பறி, பிக்பாக்கெட் போன்ற சம்பவங்கள் பெருகும் நிலையில் தற்போது வாகனத்திருட்டும் அதிகமாகிக் கொண்டே போகிறது.

மக்களின் வாழ்வாதாரத்தை காக்குமா காவல்துறை?

நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் இருசக்கர வாகனங்கள் முதல் மூன்று சக்கர வாகனங்கள் வரை திருடப்படும் நிலையில், சாமானிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இனியாவது காவல்துறை விரைந்து செயல்பட்டு பைக் திருடும் பொல்லாதவன்களை கம்பி எண்ண செய்யுமா?

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com