ஏடிஎம் மோசடிகளில் இருந்து தப்பிக்க வேண்டுமா...இதோ சில எளிய வழிமுறைகள்!!!

ஏடிஎம் மோசடிகளில் இருந்து தப்பிக்க வேண்டுமா...இதோ சில எளிய வழிமுறைகள்!!!
Published on
Updated on
2 min read

தற்போது மோசடி வழக்குகள் உலகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வருகின்றன. மோசடி செய்பவர்கள் ஏடிஎம் மோசடி சம்பவங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்கும்போது, ​​உங்களின் சிறிய அலட்சியத்தால், லட்சக்கணக்கான ரூபாய்களை பறிகொடுக்கும் சம்பவங்கள் தற்போது அதிக அளவில் நடந்து வருகிறது.  

ஏடிஎம் மோசடி:

ஏடிஎம் மோசடி வழக்குகள் அன்றாடம் நடைபெறும் வாடிக்கையாகி விட்டது.  அதை அறிந்திருந்தாலும், நாம் சில சமயங்களில் தவறு செய்து மோசடி செய்பவர்களின் வலையில் விழுந்து விடுகிறோம்.  இத்தகைய சூழ்நிலையில், நீங்களும் ஏடிஎம் மோசடியிலிருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை இந்த கட்டுரையில் விவாதிக்கலாம்.

தனியாக இருக்கிறோமா?:

ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும் போது மிகவும் கவனமாக ஏடிஎம் பின்னை பயன்படுத்த வேண்டும். மேலும், ஏடிஎம் பின் எண்ணை யாரும் அறியாமல் ரகசியமாக உள்ளிடுவது நல்லது.  ஏடிஎம்மிற்குள் செல்லும் போது உங்களுடன் யாருமில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.  அவ்வாறு வேறு யாரேனும் அங்கு இருந்தால், அவரை வெளியே செல்லச் சொல்லுங்கள்.  அந்த நபர் மீது சந்தேகம் இருந்தால், உடனடியாக ஏடிஎம்மை விட்டு வெளியேறுவது சிறந்தது.

யாரிடமும் தராதீர்கள்:

பல சமயங்களில் அவசர அவசரமாக பணம் எடுப்பதற்காக ஏடிஎம் கார்டு, பின் போன்றவற்றை நம் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் கொடுத்து விடுகிறோம்.  அவ்வாறு செய்வது அந்த சமயத்தில் வசதியாக இருக்கலாம்.  ஆனால் அதன் பிறகு நீங்களே அறியாமல் நீண்ட காலத்திற்கு அவர்களால் நீங்கள் ஏமாற்றப்படலாம்.   அத்தகைய தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்.

தற்போதைய சூழலில் நமக்கு மிக நெருக்காமனவர்களே லட்சக்கணக்கில் மோசடி செய்த பல சம்பவங்களை நாம் கண்கூடாக கண்டும் அறிந்தும் வருகிறோம்.  சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஏடிஎம் பின் மற்றும் கார்டை யாரிடமாவது கொடுக்க நேரிட்டால், உடனடியாக கார்டின் பின்னை மாற்றி வங்கி கணக்கை சரிபார்ப்பது சரியான செயலாக இருக்கும்.

பாதுகாப்பாக உள்ளோமா?:

ஏடிஎம்மில் எப்போது பணம் எடுத்தாலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும்.  ஏடிஎம்மிற்குள் நுழைந்ததும் சுற்றிப் பார்த்துவிட்டு, மறைமுகமான கேமரா எதுவும் நிறுவப்பட்டுள்ளதா என்பதை மேலோட்டமாக ஆராயுங்கள்.  

இதுபோன்ற மோசடி செய்பவர்கள் சில நேரங்களில் குளோனிங் சாதனங்கள் அல்லது கார்டு ரீடர் சிப்களை ஏடிஎம்களில் நிறுவுவதால் ஏடிஎம் கார்டு ஸ்லாட்டையும் சரிபார்க்க வேண்டும்.  அவர்களால் பயன்படுத்தப்படும்  இச்சாதனம் ஏடிஎம் கார்டின் டேட்டாவை திருடுவதால் நீங்கள் மோசடிக்கு ஆளாகலாம்.  அத்தகைய சூழ்நிலையில், ஏதேனும் சந்தேகம் இருந்தால், அந்த ஏடிஎம்மை பயன்படுத்த வேண்டாம். 

மாற்றிக் கொண்டே இருங்கள்:

உங்கள் ஏடிஎம் பின்னை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருந்தால், மோசடி செய்வதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறையும்.  வங்கியும் இதைப் பற்றி உங்களுக்கு அறிவுறுத்தி கொண்டே தான் இருக்கிறது.  மேலும், குறிப்பிட்ட மாதிரி அல்லது ஒத்த எண்களின் பின்னை உருவாக்க வேண்டாம். உங்கள் பிறந்த தேதி, மொபைல் எண்ணின் இலக்கங்கள், 0000, 1111 போன்ற இலக்கங்களையும் பயன்படுத்த வேண்டாம். 

உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி விழிப்புணர்வுடன் இருந்து இது போன்ற மோசடிகளிலிருந்து நம்மையும் நமக்கு நெருக்கமானவர்களையும் பாதுகாப்பது நமது கடமை.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com