கீழடி அகழாய்வு; சூது பவளம் கண்டெடுப்பு!

Published on
Updated on
1 min read

கீழடியில் நடத்தப்பட்ட 9ம் கட்ட அகழாய்வில் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய சூது பவளம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

9 ஆம் கட்ட அகழாய்வு

கீழடி ஒன்பதாம் கட்ட அகழாய்வில் முதன் முறையாக அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய சூதுபவளம் கண்டறியப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 9ம் கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை ஆகிய இரு தளங்களில் கடந்த ஏப்ரல் 6ல் தொடங்கி நடந்து வருகிறது.

கொந்தகை தளத்தில் 9ம் கட்ட அகழாய்வில் இரண்டு குழிகளில் இதுவரை 26 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டு அதில் 14 தாழிகளில் உள்ள மண்டை ஓடுகள், சுடுமண் பானைகள் உள்ளிட்ட பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டு வருகின்றன. முதுமக்கள் தாழியினுள் உள்ள எலும்புகள் மற்றும் சுடுமண், பானைகளில் உள்ள உணவு பொருட்கள் மதுரை காமராஜர் பல்கலை கழக மரபணு பிரிவு ஆய்வு செய்து வருகிறது. 

145 தாழிகள்

கொந்தகை தளத்தில்  இதுவரை நடந்த அகழாய்வில் மொத்தம் 158 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. நேற்று 145வது முதுமக்கள் தாழியினுள் உள்ள பொருட்களை வெளியே எடுக்கும் பணி நடந்து வந்தது. இதில் 17.5 செ.மீ ஆழத்தில் ஆய்வு செய்த போது தாழியினுள் 1.4 செ.மீ நீளமும், இரண்டு செ.மீ விட்டமும் கொண்ட இரண்டு சூதுபவளங்கள் (கார்னிலியன்) கண்டறியப்பட்டுள்ளது. 

கீழடியில் ஏற்கனவே ஆறாம் கட்ட அகழாய்வின் போது பன்றி  உருவம் பதித்த சூதுபவளம் கண்டறியப்பட்டு கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  அதன்பின் கடந்த 8ம் கட்ட  அகழாய்வில் 80வது முதுமக்கள் தாழியினுள் 74  செந்நிறம் கொண்ட சூதுபவளங்கள் கண்டறியப்பட்டன. தற்போது கிடைத்த இரண்டு சூதுபவளங்களில் ஒன்றில் மேலும் கீழும் தலா இரண்டு கோடுகளும் நடுவில் அலைகள் போன்ற குறியீடும் வெண்மை நிறத்தில் உள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com