அமைச்சர்களுக்கு வாய் கொழுப்பு அதிகம்...ஓசியை அனுபவிப்பவர்கள் ஓசியை பற்றி பேசுகிறார்கள்...!

அமைச்சர்களுக்கு வாய் கொழுப்பு அதிகம்...ஓசியை அனுபவிப்பவர்கள் ஓசியை பற்றி பேசுகிறார்கள்...!
Published on
Updated on
1 min read

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து விடுதலை பெற்றால் மட்டுமே மக்கள் பணியாற்ற முடியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். 

ஆம்னி பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளதே?:

மதுரை பரவையில் தனியார் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம், ஆம்னி பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளதே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளித்த அவர், தமிழக முதல்வர் தற்போதைய நிலை குறித்து கவனமாக கையாள வேண்டும். ஏனென்றால், தீபாவளி வர உள்ளதால்,  அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுபடுத்த தேவையான நடவடிக்கையை தற்போதே தொடங்க வேண்டும் எனவும், விழா காலங்களில் அரசு பேருந்துகள் , ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை  அரசு அனைத்து தரப்பினருடன் பேசி  நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், ஆம்னி பேருந்துகளின் தற்போதைய கட்டண உயர்வால் மக்கள் பாதிக்காத வகையில் தமிழக அரசு அதிக சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் அமைச்சர்களுக்கு வாய் கொழுப்பு அதிகம்:

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் தற்போதுள்ள அமைச்சர்களுக்கு வாய்க்கொழுப்பு அதிகமாகி விட்டதாகவும் ஓசி கார், ஓசி பணியாட்கள், ஓசி வீடு என அனைத்தையும் ஓசியில் அனுபவித்துக் கொண்டு ஓசி பயணத்தைப் பற்றி அமைச்சர் வாய் கொழுப்பாக பேசுவதாக குற்றம் சாட்டினார். மேலும், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இலவசம் என்று கூறாமல் விலையில்லா என்ற வார்த்தையை உபயோகித்ததைப்போல், மகளிருக்கு இலவச பேருந்து பயணம்  என்று உள்ளதை,  மகளிருக்கு கட்டணமில்லா பேருந்துகள் என மாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

குதிரை ஓட்டியாக பயன்படுத்தும் திமுக:

அதேபோன்று, அதிமுக ஆட்சி காலத்தில் யானை பாகன் போல் செயல்பட்ட தற்போதைய மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தற்போது குதிரை ஓட்டியாக பயன்படுத்துகிறார்கள்  என்று குற்றம் சாட்டினார். ரேசன் அரிசி கடத்தல் என்பது தற்போது அதிகமாகி உள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் செயலாளர் ராதாகிருஷ்ணன் கைகள் கட்டப்பட்டு உள்ளதாக விமர்சனம் செய்தார்.

மேயரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்:

அதைத்தொடர்ந்து பேசிய அவர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து விடுதலை பெற்றால் மட்டுமே மக்கள் பணியாற்ற முடியும். எனவே, முதலில் மதுரை மேயரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என மதுரையில்  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com