தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் மலைகிராம மக்கள் மீதான வன்முறை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தில் மலைக் கிராம மக்கள் சந்தன மரங்களை கடத்தி வைப்பதாகக்கூறி கடந்த 1992 ஆம் ஆண்டு வருவாய்த்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, அக்கிராமத்தில் உள்ள 13 வயது உள்பட 18 இளம் பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. பழங்குடியின மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்கொடுமை, தமிழ்நாட்டை மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது.
தொடர்ந்து இந்த புகார் தொடர்பான விசாரணையை அப்போதைய தமிழக அரசான அதிமுகவும், காவல் துறையும் இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ- க்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், ஐஎஃப் எஸ் அதிகாரிகள் உள்பட 269 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது. ஆனால், வழக்கு நடைபெற்று கொண்டிருந்த காலத்தில் 269 பேரில் 54 பேர் இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு: இன்று தீர்ப்பு..!
இதனால் வழக்கை விசாரித்த தருமபுரி முதன்மை அமர்வு நீதிமன்றம், சம்பவம் நடந்து 19 ஆண்டுகள் கழித்து, 2011 ம் ஆண்டு பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டது. அந்த தீர்ப்பில் உயிரிழந்த 54 பேரை தவிர மீதமுள்ள 215 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்து, அதில் 12 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்த அரசு அதிகாரிகள்(குற்றம்சாட்டப்பட்டவர்கள்), சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்து, வாச்சாத்தி கிராமத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. குற்றவாளிகள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், தருமபுரி முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, பாதிக்கப்பட்ட 18 பேருக்கு உடனடியாக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அப்போதைய எஸ்.பி.மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரூ. 5 லட்சம் குற்றம் புரிந்தவர்களிடம் வசூலிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட அல்லது அவர்களது குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், 1-3 ஆண்டுகள் வரை சிறைதண்டனை உள்ளிட்ட அனைத்தும் செல்லும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.