படங்களில் வரும் ”மது தீங்கானது” எச்சரிக்கை வாசகம்...கட்டாயமாக்கியதே நான் தான்...!

படங்களில் வரும் ”மது தீங்கானது” எச்சரிக்கை வாசகம்...கட்டாயமாக்கியதே நான் தான்...!
Published on
Updated on
2 min read

மது தீங்கானது என்ற எச்சரிக்கை வாசகம் திரையில் இடம் பெறுவதை கட்டாயமாக்கியதே நான் தான் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.


மதுகடைகளை மூட வேண்டும், மது விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வரும் நிலையில், சென்னை கோயம்பேடு அருகே உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் தானியங்கி மதுபான இயந்திரத்தை கடந்த வாரம் டாஸ்மார்க் நிர்வாகம் கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள், ஏடிஎம் மிஷினை போல், பணம் போட்டால் மது என்ற தானியங்கி மதுபான இயந்திரத்தை மூட வேண்டும் எனக் கோரி கண்டனம் தெரிவித்தனர்.

அந்த வகையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தானியங்கி மது விற்பனை இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்துவிடும். எனவே, இந்த இயந்திரத்தை மூட வேண்டும்; இல்லையென்றால் பாமக சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என தமிழக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ”அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட எந்த எதிர்க்கட்சி எம்.பி.யாவது இந்தியாவில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துமாறு பேசி இருக்கிறார்களா அல்லது கவன ஈர்ப்பு தீர்மானமாவது கொண்டு வந்திருக்கிறார்களா? அதற்கு தைரியம் இல்லாதவர்கள் இங்கு வந்து அரசியல் செய்வதாக” கூறினார்.

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், செந்தில் பாலாஜி மதுவிலக்குத்துறை அமைச்சரா அல்லது மது விற்பனைத்துறை அமைச்சரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் மக்கள் அதிகம் வந்து செல்லும் வணிக வளாகங்களில் மதுப்புட்டி வழங்கும் தானியங்கி எந்திரங்களை அறிமுகம் செய்வது மதுவணிகத்தை ஊக்குவிக்கும் செயல் என்ற குற்றச்சாட்டிற்கு, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பதிலளிக்க  இயலாத மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வேண்டுமென்றால் அன்புமணி இராமதாஸ் நாடாளுமன்றத்தில் பேசி நாடு முழுவதும் மதுவிலக்குக் கொள்கையை கொண்டு வரலாமே? என தம்மைத்தாமே அறிவாளி என்று நினைத்துக் கொண்டு எதிர்வினா எழுப்பியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அடுத்ததாக, செந்தில் பாலாஜி தெரிந்து கொள்வதற்காக சில செய்திகளை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ள அன்புமணி, 

1. மத்திய அரசால் மதுவிலக்கைக் கொண்டு வர முடியாது. ஆனால், அது தொடர்பான வழிகாட்டுதலை  வழங்க முடியும். அதை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, தேசிய ஆல்கஹால் கொள்கையை (National Alcohol Policy ) வகுத்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தேன்.

2. திரைப்படங்களில் மது அருந்தும் காட்சிகள் வரும் போது, மது தீங்கானது என்ற எச்சரிக்கை வாசகம் திரையில் இடம் பெறுவதை கட்டாயமாக்கினேன்.

3. மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதியை உலக மது இல்லா நாளாக (World Dry Day) அறிவிக்க வேண்டும்; அந்த நாளில் உலகின் எந்த மூலையிலும் மது விற்பனை செய்யப்படக்கூடாது என்று அறிவிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனரிடமும், ஜெனிவாவில் நடைபெற்ற உலக நலவாழ்வு பொது அவை (World Health Assembly) கூட்டத்திலும் வலியுறுத்தினேன். எனக்கு பிறகு மத்திய சுகாதார அமைச்சர்களாக வந்தவர்கள் அதை தொடர்ந்து வலியுறுத்தாததால் அது இன்று வரை சாத்தியமாகாமல் போய்விட்டது.

4. மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பிறகும் கூட, மத்திய அரசு அதன் அதிகாரத்திற்குட்பட்டு மதுவின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 4 முறை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளேன். மதுவிலக்கு குறித்து இனி பேசும் போது இதையெல்லாம் செந்தில் பாலாஜி அறிந்து கொண்டு பேச வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com