ஆளுநருக்கு எதிராக அரசின் பிரதிநிதிகள் மனு...டெல்லி பறந்த ஆர்.என்.ரவி!

ஆளுநருக்கு எதிராக அரசின் பிரதிநிதிகள் மனு...டெல்லி பறந்த ஆர்.என்.ரவி!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டின் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

சர்ச்சையான ஆளுநர் உரை :

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் பெரும் சர்ச்சையில் முடிந்தது. ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்ட முதல் நாள் கூட்டத்தொடரில், தமிழ் தலைவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் ஆளுநர் தானாக ஒரு உரையை வாசித்தார். இதனால் ஆளுநரை வெளியேற சொல்லி பல்வேறு எதிர்ப்பு குரல்கள் எழுந்தது. 

தீர்மானம் கொண்டு வந்த முதலமைச்சர் :

இதையடுத்து ஆளுநர் உரையில் பல்வேறு வார்த்தைகளை புறக்கணித்த ஆர்.என்.ரவியை கண்டித்து, முதலமைச்சர் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பாதியிலேயே ஆளுநர் வெளியேறியது சர்ச்சையானது. இதன்தொடர்ச்சியாக ஆளுநரின் பொங்கல் விழா அழைப்பிதழ் சர்ச்சையான நிலையில்,  ஆளுநரின் பொங்கல் விழாவை திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்துள்ளது.

இரண்டு நாள் டெல்லி பயணம் :

இந்நிலையில் இரண்டு நாள் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். ஏற்கனவே, தமிழ்நாடா? தமிழகமா? என்ற சர்ச்சையை தொடர்ந்து, ஆளுநர் உரையால் சட்டப்பேரவையில் ஏற்பட்ட சர்ச்சை விவகாரத்திற்கு இடையே 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர், குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து, மாநில அரசியல் சூழல் குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது நடைபெற்ற விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com