பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் கடந்த நவம்பர் 7ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்இய தீர்ப்பை எதிர்த்து அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு இன்று கூட்டியது. இதில் பங்கேற்ற விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தங்கள் கட்சியின் சார்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.
பொருளாதரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு:
2022 நவம்பர் 12ஆம் நாள் சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் பங்கேற்கும் வகையில் தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள்:
1. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளைத் தகர்க்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக, சமூக நீதி கோட்பாட்டுக்கு எதிராக அமைந்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு இதனை நடைமுறைப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
2. இந்துச் சமூகத்தில் ஒருவரது சமூக மதிப்பு அவரது பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அது பொருளாதார நிலைகளால் ஒரு போதும் மாறுவதில்லை. சாதி அடிப்படையில் சமூக மதிப்பீடான உயர்வு - தாழ்வு நெடுங்காலமாக நிலவுகிறது. எனவே, கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு அதிகாரத் தளங்களில் புறக்கணிக்கப்பட்டு போதிய பிரதிநிதித்துவம் பெற இயலாத பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தபட்டோர் ஆகிய சமூகப் பிரிவினருக்கு அளிக்கப்படும் முன்னுரிமையே சமூக நீதி அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பதை நாம் அறிவோம்.
3. அரசமைப்புச் சட்டத்தில் உள்ள இந்த அடிப்படைக் கூறுகளை நீர்த்துப்போகச் செய்வதற்காகவே இடஒதுக்கீட்டு முறையில் பொருளாதார அளவுகோலைத் திணிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். எனவே, இதனை ஏற்பதும் நடைமுறைப்படுத்துவதும் எதிர்காலத்தில் ஒட்டுமொத்தமாக இடஒதுக்கீட்டு முறையையே சிதைப்பதற்கு வழி வகுத்துவிடும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அஞ்சுகிறது.
4. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சிறப்பு ஏற்பாடுகள செய்யப்பட்ட போது நிர்வாகத் திறன் குறைந்துவிடக்கூடாது என ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. அரசியலமைப்பின் 340ஆவது பிரிவின் கீழ், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நிலைமைகளை விசாரிக்க ஒரு கமிஷன் நியமிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால், 103 ஆவது திருத்தத்தின்படி வழங்கப்பட்ட EWS இட ஒதுக்கீட்டிற்உ அத்தகைய “நிர்வாகத்திறன் பற்றிய நிபந்தனை” விதிக்கப்படவில்லை. கமிஷனும் அமைக்கப்படவில்லை.
5. 103 ஆவது சட்டத் திருத்தமானது, பொருளாதார ரீதியாக நலிவடைந்த நபர்களுக்கு 10% இடஒதுக்கீடு அளிப்பதன் மூலம் ஏற்கனவே அதிகப்படியாகவே பிரதிநிதித்துவம் பெற்றுள்ள முன்னேறிய சமூகப்பிரிவினருக்கு மேலும் கூடுதலான வாய்ப்பளிக்கிறது. அவ்வாறு செய்வது அரசியலமைப்பின் சமத்துவம் என்ற கருத்தை மீறிய செயலாகும். இதன் மூலம் மாநிலத்தின் இடஒதுக்கீடு கொள்கைகளின் அசல் பயனாளிக் குழுக்களாக இருந்த ஓபிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினரின் பிரதிநிதித்துவத்தை நீர்த்துப்போகச் செய்கிறது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிரானதாகும்.
6. சாதி அல்லது வருமானம் போன்ற ஒற்றை அளவுகோலின் அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு கொடுப்பதற்கு சில மாநில அரசுகள் இயற்றிய சட்டங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதாவது, சாதி என்கிற ஒற்றை அளவுகோலின் அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கிய சட்டம் பாலாஜி எதிர் மைசூர் மாநிலம் என்ற வழக்கில் ரத்து செய்யப்பட்டது. அதுபோல வருமானம் என்கிற ஒற்றை அளவுகோலின் அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்குவதை இந்திரா சாஹ்னி எதிர் யூனியன் ஆஃப் இந்தியா என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதற்கு மாறாக இந்த இட ஒதுக்கீடு பொருளாதார அளவுகோலை மட்டுமே கொண்டு வழங்கப்பட்டுள்ளது.
7. ‘க்ரீமி லேயர்’ என்ற புதிய வகைப்பாட்டைப் பிற்படுத்தப்பட்டப் பிரிவினரிடையே உச்ச நீதிமன்றம் அறிமுகப்படுத்தியது . ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்தாலும் குறிப்பிட்டதொரு வருமான வரம்பைத் தாண்டிவிட்டால் அவரைப் பிறப்டுத்தப்பட்டவராகக் கருத முடியாது என்றது. ஒரு முன்னேறிய சாதியைச் சேர்ந்தவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மணந்தபோதும் அவருக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று பி.வி.கிரி வழக்கில் தீர்ப்பு அளித்தது. அதாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைத் திருமணம் செய்துகொள்வதால் முன்னேறிய வகுப்பினரை அது பிந்தங்கச் செய்யாது என உச்சநீதிமன்றம் கூறீயது. அதேபோல பழங்குடியினர் ஒருவர் த விருப்பத்தின் பேரில் ஷத்ரியாக மாறினாலும், அவர்பழங்குடியினராக இருப்பதிலிருந்து மாறிவிட முடியாது’ எனவும் கூறியுள்ளது.
8. EWS இடஒதுக்கீட்டில் கட்டுப்பாடோ நிபந்தனையோ விதிக்கப்படவில்லை ,பாதுகாப்பு அரண்கள் இல்லை, முற்றுப்புள்ளியும் இல்லை. எடுத்துக்காட்டாக எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரது இட ஒதுக்கீட்டுக்கு ஒரு காலவரம்பு உள்ளது. அரசு சேவைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை போதுமான பிரதிநிதித்துவம் பெறும் வரை இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என்பதே அந்த கால வரம்பாகும். அப்படி EWS இட ஒதுக்கீட்டுக்கு எந்த கால வரம்பும் இல்லை. பிற இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு இருப்பது போல நிபந்தனைகளும் இல்லை .
9. இந்திய மக்கள் தொகையில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் 10% இருப்பதாக கூறுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. அதற்கான கணக்கெடுப்பு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே சாதிவாரி மக்களத்தொகை கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட வேண்டும் என இந்திய ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.
10. தமிழ்நாட்டில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு தற்போது வழங்கப்படும் இட ஒதுக்கீடுகளின் அளவை உயர்த்தவேண்டும். கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ள எஸ்சி பிரிவினரின் இட ஒதுக்கீட்டை மக்கள் தொகை அடிப்படையில் 20% ஆக உயர்த்த வேண்டும்.
11. தமிழ்நாட்டில் இருக்கும் தனியார் கல்வி நிறுவனமங்கள் அனைத்திலும் பணி நியமனம், மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு ஆணையிடவேண்டும்.
12. EWS இட ஒதுக்கீட்டு சட்டத்துக்கு எதிராக பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் பங்கேற்கும் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றைத் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒருங்கிணைக்க வேண்டும் இவ்வாறு அனைத்துக் கட்சி கூட்டத்தில் விசிக கட்சியின் சார்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.