ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வார் ரூம் செயலாளராக சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டதை அடுத்து, கர்நாடகாவை போல ராஜஸ்தானிலும் வெற்றிக்கொடி நாட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கர்நாடக தேர்தலும் சசிகாந்த் செந்திலும்
கடந்த மே மாதத்தில் கர்நாடக சட்டபேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் பல்வேறு கருத்துகணிப்புகளை பொய்யாக்கி காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மையையான இடங்களை கைப்பற்றி ஆட்சியமைத்தது. கர்நாடகாவில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் போராட்டத்தில் தோல்வியை தழுவியது.
2024 ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக கருதப்பட்ட கர்நாடக தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது பாஜகவினரிடையே மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் சோர்ந்துபோய் கிடந்த காங்கிரஸ் கூட்டணிக்கு இது புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதற்கான காரணம் என்ன? இந்த மாற்றம் எப்படி சாத்தியமானது? என்ற தேடுதலை தொடங்கியபோதுதான் சசிகாந்த் செந்திலின் பெயர் வெளியில் தெரிய ஆரம்பித்தது. பாஜகவை வீழ்த்திய ஐஏஎஸ், வார் ரூமை அலங்கரித்த தமிழர் என சசிகாந்தின் புகழ் தமிழ்நாடு காங்கிரஸ் மட்டுமின்றி பாஜகவிற்கு எதிரான அனைத்து வட்டாரங்களிலும் பிரபலமடைந்தது.
யார் இந்த சசிகாந்த் செந்தில்?
2019 ஆம் ஆண்டு மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்ததையடுத்து நாடெங்கும் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது ஐஏஸ் அதிகாரியாக கர்நாடகாகாவில் பணியாற்றி வந்த சசிகாந்த் செந்தில் இச்சட்டத்தை கண்டித்து அப்போது தனது பதவியை ராஜினாமா செய்தார். இது அப்போதைய அரசியலில் பரபரப்பை உண்டாக்கியது.
இதனைத் தொடர்ந்து இவர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் கட்சியில் இணைந்தார். சில காலத்திலேயே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததும் அதன் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டதும் அவரது கட்சிக்காரர்களுக்கே தெரிந்திருக்குமா? என்ற கேள்வி ஒருபுறம் இருந்து கொண்டிருந்தது. இந்த நிலையில்தான் கர்நாடக தேர்தல் முடிவுகள் அவரை பற்றிய தேடல்களை அதிகப்படுத்தி அவருக்கு புகழை தேடித்தந்தன.
தமிழ்நாடு தலைவர் போட்டியில்
கர்நாடக தேர்தலில் வெற்றிக்கு காரணமாக இருந்ததால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவராக இவர் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வந்தது. ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து எந்த காரணமும் இல்லாமல் ஓய்வு பெற்று பின்னர் பாஜகவின் தலைவராக மாறியுள்ள அண்ணாமலை போன்றவர்களை எதிர்க்க .சசிகாந்தை போன்ற திறமையும், இலட்சிய உறுதியும் கொண்டவர்கள் தலைவராக வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும் குரல்கள் எழத்தொடங்கின.
இதனையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருக்கான போட்டியில் இவரது பெயரும் இருப்பதாக கூறப்படுவது மட்டுமில்லாமல், இவரை தலைவராக நியமிப்பதற்காவே தமிழ்நாடு கமிட்டிக்கு தலைவரை நியமிப்பதை தாமதபடுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
வெல்லுமா ராஜஸ்தான் வார் ரூம்?
இப்படிப்பட்ட சூழலில்தான் சசிகாந்த் செந்தில் ராஜஸ்தான் தேர்தலில் வார் ரூம் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுத் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் சசிகாந்த் செந்திலை ராஜஸ்தான் சட்டப்பேரவை செயலாராகவும் லோகேஷ் ஷர்மா, கேப்டன் அரவிந்த் குமார் மற்றும் ஜஸ்வந்த் குஜ்ஜார் ஆகியோர் இணை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் கட்டாயமாக அடுத்து வர இருக்கும் மக்களவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் இதில் வெற்றியை ஈட்டவதற்கு என்டிஏ கூட்டணியும் இந்தியா கூட்டணியும் கடுமையாக போட்டியிட்டு வருகின்றனர். இதில் காங்கிரஸ் வசமிருக்கும் ராஜஸ்தானை கைப்பற்ற பாஜக முயற்சித்து வருகிறது. இதற்காக பிரதமர் மோடியை நேரடியாக களத்தில் இறக்கி பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருக்கிறது.
அதே நேரத்தில் இராஜஸ்தானில் ஆட்சியை தக்க வைக்க ராகுல்காந்தியும் விரிவான பிரச்சார பயணத்தை மேற்க்கொள்ள இருக்கிறார். முதலமைச்சர் அசோக் கெலாட்டும் அதற்கேற்ப கேஸ் விலை குறைப்பு, மகளிருக்கான மானியம் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தனது வார் ரூம் பணிகளை சிறப்பாக செய்து காங்கிரஸின் ஆட்சியையும், பாஜகவை வீழ்த்தும் போர்க்களத் தலைவர் எனும் பெருமையையும் சசிகாந்த் செந்தில் தக்க வைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-ச.பிரபாகரன்
இதையும் படிக்க|| 800 திரைப்படம் 5 ஆண்டுகள் உழைப்பு - முத்தையா முரளிதரன் பேச்சு