ஆசியக் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் 4 -3 என்ற கோல் கணக்கில் மலேசியா அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா- மலேசியா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற போட்டியின் முதல் சுற்றில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமனில் இருந்தன.
இதையும் படிக்க : குழந்தையை கொடுத்து பஸ்ஸில் சீட் பிடித்த தாய்...!
தொடர்ந்து நடைபெற்ற 2-வது சுற்றின் முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியா அணி முன்னிலை பெற்றிருந்தது. 2 கோல்கள் பின் தங்கியிருந்த நிலையில் மூன்றாவது சுற்றின் இறுதி நிமிடத்தில் அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து 3-3 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்து அசத்தியது.
அடுத்து நடைபெற்ற இறுதிச் சுற்றில் இந்திய அணி தனக்கு கிடைத்த இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்பை தவற விட போட்டியில் பரபரப்பு உச்சத்தை தொட்டது. தொடர்ந்து பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் மேலும் ஒரு கோல் அடித்து 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
4-வது முறையாக ஆசிய சாம்பியன் ஹாக்கி கோப்பையை வென்று இந்திய அணி அசத்தியுள்ளது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி தோல்வியே சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.