தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அரசுப் பேருந்தில் இடம் பிக்க, தனது குழந்தையை ஜன்னல் வழியாக கொடுத்த தாயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் நினைவு பேருந்து நிலையத்திலிருந்து பாவூர்சத்திரம், திருநெல்வேலி தென்காசி, சுரண்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அம்பாசமுத்திரம் செல்லும் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் பலர் நீண்ட நேரத்திற்கு பின்பு வந்த பேருந்து ஒன்றில் ஏறுவதற்காக ஒருவரை ஒருவர் முண்டியடித்தனர்.
அப்பொழுது பலரும் தங்களின் உடைமைகளை பேருந்தில் ஜன்னல் வழியாக போட்டு சீட் பிடிக்கும் பாணியை கடைப்பிடித்து வந்த நிலையில் சிறு குழந்தையை கையில் வைத்திருந்த தாய் ஒருவர் குழந்தையை பேருந்தின் ஜன்னல் வழியே உள்ளே நின்ற பெண்ணிடம் கொடுத்து இடம் பிடித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதற்கு காரணமாக பேருந்து பயணிகளிடம் கேட்டதற்கு இலவச பேருந்துகள் என்ற பெயரில் அதற்கான பேருந்துகள் வரும் வரையில் பெண்கள் காத்திருந்து ஏறுவதால் பெரும்பாலும் கூட்ட நெருக்கடி ஏற்படுகிறது எனவும் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பலரும் படிக்கட்டில் பயணம் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
மேலும் சிறு குழந்தையை ஜன்னல் வழியே கொடுப்பதற்கு காரணம் நெருக்கடியில் குழந்தை மீது காயம் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காகவே கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.ஆலங்குளத்தில் பேருந்தில் சீட் பிடிப்பதற்கு தனது சிறு குழந்தையை பேருந்தின் ஜன்னல் வழியே கொடுத்து சீட் பிடித்த தாயின் செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.