உலகம்

கரிநாளான சுதந்திர தினநாள்...... பேரணியாக திரண்ட மாணவர்கள்!!

Malaimurasu Seithigal TV

காவலர்களின் தடைகளையும் மீறி சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மேற்கொள்ளும் வடக்கிலிருந்து கிழக்கிற்கான பேரணி நகர்கின்றது.

பேரணி:

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கிய பேரணி நேற்று ஆரம்பமான நிலையில் இன்று தொடர்ந்து பேரணி நகர்ந்துகொண்டுள்ளது.

தடைகளை உடைத்து:

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பேரணி ஆரம்பமாகி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக சென்ற நிலையில் போலிஸார் பேரணியை நடத்துவதற்கு அனுமதி இல்லை என தெரிவித்து பேரணியை தடுக்க முற்பட்ட போது போராட்டக்காரர்கள் போலிஸாரின் தடைகளை உடைத்து இராமநாதன் வீதி ஊடாக பயணித்தனர்.

முன்னேறிய போராட்டம்:

பின்னர் இராமநாதன் வீதியின் ஊடாக சென்ற பேரணியை கலட்டி சந்தியில் மீண்டும் போலிஸார் இடைமறித்த போது தடைகளை மீறி போராட்டக்காரர்கள் தொடர்ந்து பயணித்து காங்கேசந்துறை வீதியை சென்றடைந்தனர்.

நினைவு ஸ்தூபி:

தொடர்ந்து காங்கேசந்துறை வீதியால் பயணித்த பேரணி உலக தமிழாராய்சி மாநாட்டு படுகொலை நினைவுத் ஸ்தூபிக்கு சென்று அங்கு அஞ்சலி செலுத்திய பின்னர் வைத்தியசாலை வீதிக்கு சென்றது.

முடிவடையும்:

பின்னர் வைத்தியசாலை வீதியில் இருந்து ஆரம்பமான பேரணி ஏ9 வீதிக்கு சென்று செம்மணி சந்தியை அடைந்தது.  செம்மணி சந்தியில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு மட்டக்களப்பு நோக்கிய பேரணி தொடர்ந்து பயணித்தது.  இந்த நிலையில் இன்றும் பேரணி நகர்கின்றது.  எதிர்வரும் 07ம் திகதி பேரணி மட்டக்களப்பை வந்தடையவுள்ளது.

ஆதரவு பேரணி:

இதேவேளையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகத்துடன் சிவில் அமைப்புக்களும்  இணைந்து சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி முன்னெடுக்கும் வடக்கிலிலிருந்து கிழக்கு நோக்கிய மக்கள் எழுச்சி பேரணிக்கு வவுனியா மாவட்டத்திலும் இன்றைய தினம் ஆதரவும் பேரணி முன்னெடுக்கப்பட்டது.