தமிழ்நாடு

தேனி மாவட்டத்திற்கு முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு...!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாட்டில் முல்லைப்பெரியாறு, திருமூர்த்தி, அமராவதி ஆகிய அணைகளில் இருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

பாசனத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு, அமராவதி, திருமூர்த்தி ஆகிய அணைகளில் இருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர், ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு முதல் போகத்திற்காக 200 கன அடி வீதமும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக 100 கன அடி நீர் என, மொத்தம் 300 கனஅடி நீரை முல்லைப்பெரியாறு அணையில் இருந்து இன்று திறந்துவிடப் பட உள்ளது. இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படவுள்ள நிலையில், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள திருமூர்த்தி அணையிலிருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இந்த நீரை ஆதாரமாக கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன. 

உடுமலையை அடுத்த அமராவதி அணையில் இருந்தும் இன்று பாசனத்திற்கான தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.