தமிழ்நாடு

மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல் - கனிமொழி எம்.பி.,

Tamil Selvi Selvakumar

மாலத்தீவில் பிடிபட்ட தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்கவும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய சூழலையும் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார். 

தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கனிமொழி, புயல் அபாயத்தை தொடர்ந்து கரை ஒதுங்கிய தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாகவும், மேலும் இது தொடர்பாக மத்திய அமைச்சரை நிசயம் தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்வேன் என்றும், விரைவில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிப்பதற்கு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும் கூறினார்.

தொடர்ந்து, இது போன்ற பிரச்சனைகள் இலங்கையை அடுத்து மாலத்தீவிலும் தொடர்வது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த கனிமொழி, இந்த பிரச்னைக்கு மத்திய அரசு இலங்கை தமிழக மீனவர்கள் மற்றும் இங்குள்ள மீனவ அமைப்புகளோடு பேசி அதற்கு ஒரு தீர்வை காண வேண்டும் என கூறினார். 

ஒவ்வொரு இடத்திலும் மீனவர்கள் கைது செய்யப்படுவதும், மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு அவர்கள் விடுதலை செய்யப்படுவதும், படகுகளை பிடித்துக் கொள்வதும் என்பது தொடர்கதையாக மாறிய நிலையில் அதற்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.