தமிழ்நாடு

முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்! மாணவ, மாணவிகளுடன் உணவருந்திய உதயநிதி!!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அரசு தொடக்க பள்ளிகளில் முதலமைச்சரின் விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவுத்திட்டம் துவங்கப்பட்டது. அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு, எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உற்சாகமாக உணவருந்தினர்.  


முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை, திருவல்லிக்கேணி  நடுநிலைப் பள்ளியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்ததும் மாணவ, மாணவிகளுடன் உணவருந்தினார். . இந்நிகழ்ச்சியில் மேயர் பிரியா மாநகராட்சி செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். .பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் முழுவதும் உள்ள 31, 008 அரசு பள்ளிகளில் சுமார் 17 லட்சம் குழந்தைகளும், சென்னையில் மட்டும் 65,030 குழந்தைகளும் இந்த திட்டத்தால் பயனடைவதாக கூறினார்.

திருச்சியில் மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்  என பலர் கலந்து கொண்டனர். அதேபோல், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை  அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி  மானூர் கிராமத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்து குழந்தைகளுடன் உணவு அருந்தினார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் 524 பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார். சோரீஸ்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த கனிமொழி மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார். 

மதுரை, முத்துப்பட்டியில் அரசு கள்ளர் உயர்நிலைப்  பள்ளியில் நடைபெற்ற முதலமைச்சர் காலை உணவுத்திட்டம் விழாவை அமைச்சர் பழனிவேல் தியகராஜன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவர்களுடன் அமர்ந்து அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உணவருந்தினார்.

காலை உணவுத்  திட்டத்தின் விரிவாக்கம், தொடர்ச்சியாக  நீலகிரி மாவட்டம் குன்னூர் பெட்டடி அரசு நடுநிலைப் பள்ளியில்  சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன் காலை துவக்கி வைத்தார். இதன் மூலம் நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள 290 பள்ளிகளில் 12ஆயிரம்  குழந்தைகள் பயன்பெறுகின்றனர். 

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த சென்னசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அமைச்சர் காந்தி துவக்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவருந்தினார்.