கலைஞர் படித்த தொடக்க பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

கலைஞர் படித்த தொடக்க பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
Published on
Updated on
1 min read

ஏழைப் பிள்ளைகள், ஒடுக்கப்பட்ட  பிள்ளைகள் கல்வி பெற வறுமையும் சாதியும் தடையாக இருக்க கூடாது என்று பெரியார், அண்ணா, கருணாநிதி வகுத்த வழித்தடத்தில் தன்னுடைய திட்டங்கள் இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த  தொடக்க பள்ளியில் விரிவுபடுத்தப்பட்ட காலை  உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி  வைத்து அவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார்.

பின்னர் ஆற்றிய உரையில், சென்னையில் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது நிறைய பள்ளி மாணவிகள் காலை உணவு சாப்பிடவில்லை என்று கூறியதை மனதில் வைத்தும், மாணவர்களுக்கு உள்ள ரத்த சோகையைப் போக்கவும் காலை உணவுத் திட்டத்தை துவங்க  முனைப்பு காட்டியதாக கூறினார்.உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பர் அதுபோல உயிர் கொடுத்த அரசாக திமுக அரசு உள்ளது என முதலமைச்சர் குறிப்பிட்டார்.  காலை உணவுத்திட்டத்தால் தன் மனம் நிறைந்து, மகிழ்கிறது என்றும் இதன் மூலம் 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் முதலமைச்சர் கூறினார்.

காலை உணவுத் திட்டத்திற்காக அரசு செய்வது நிதி ஒதுக்கீடு அல்ல; நிதி முதலீடு என்றார். மாணவர்கள் இதற்கான லாபத்தை ஈட்டி தருவார்கள் என்றார். மேலும்  ஊட்டச்சத்து குறைபாடு இருக்க கூடாது, ரத்த சோகையை தவிர்க்க வேண்டும். ஊட்டச்சத்து குறைவு இல்லா மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக உள்ளிட்ட 5 நோக்கங்களை நிறைவேற்ற காலை உணவு  திட்டம் கொண்டு வரப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார். உதவ யாரும் இல்லை என கலங்கும் மக்களுக்கு திமுக அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் இது துரோணாச்சாரியார் காலம் அல்ல; ஏகலைவன்கள் காலம் என முதலமைச்சர் தெரிவித்தார்.

எந்த காரணம் கொண்டும் கல்வி தடைபட கூடாது என்பதில் திமுக அரசு  கவனமுடன் இருப்பதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், படிப்பில் மட்டுமே மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்  என அறிவுறுத்தினார். நிலாவிற்கு சென்று சாதனை படைத்துள்ள தமிழக விஞானிகள் போல  உலகமே வியக்கும் வகையில் மாணவர்கள் உயர வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டு கொண்டார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com