தமிழ்நாடு

டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்த திருமாவளவன்...வைத்த கோரிக்கை என்ன?

Tamil Selvi Selvakumar

விசிக சார்பில் நடத்தப்படும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி விசிக மற்றும் சிபிஎம் சார்பில் டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து மனு அளித்தனர். 

டிஜிபியிடம் மனு அளித்த விசிக:

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி மனித சங்கிலி பேராட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி தொல்.திருமாவளவன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து மனு அளித்தனர்.

அரைவேக்காட்டுத்தனமான பேச்சு:

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த  கே.பாலகிருஷ்ணன், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை ஒழிக்க முடியாது என்று பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியது அரைவேக்காட்டுத்தனமானது என்றும், இப்படி எல்லாம் பேசினால் பிஜேபியும், ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் வளர்ந்து விடும் என்று நினைப்பதாகவும் சாடினார்.

காந்தி ஜெயந்தியை சீர்குலைக்கவே இந்த பேரணி:

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டு இருக்கும் சமயத்தில், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கான காரணம் மிக அபத்தமாக இருப்பதாகவும், காந்தி ஜெயந்தி பண்டிகையை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இவர்கள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் தமிழகத்தில் முஸ்லீம், இந்துக்கள் இடையே மத மோதலை உருவாக்கவே ஆர்.எஸ்.எஸ் முயற்சிப்பதாவும் செய்தியாளர்களிடம் திருமாவளவன் குற்றம் சாட்டி பேசினார்.