புதிய கட்சியா..!!!கட்சி தொண்டனா...!!!என்ன செய்ய போகிறார் கெலாட்!!

புதிய கட்சியா..!!!கட்சி தொண்டனா...!!!என்ன செய்ய போகிறார் கெலாட்!!

கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவில் முதல் முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, பெரிய அளவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டின்  காங்கிரஸ் தலைவர் பந்தயத்தில் இருந்து வெளியேறிய பிறகு, மீண்டும் வேட்பாளர் தேர்வு தொடங்கியுள்ளது. இப்போது அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களின் குழுவான ஜி-23 தனது வேட்பாளரை நிறுத்தலாம் என்று கூறப்படுகிறது. அப்படி நடந்தால் போட்டி மிக சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தெரிந்துகொள்க: காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான விலை ராஜஸ்தானா?? ராஜஸ்தானிலும் ஆட்சியை இழக்குமா காங்கிரஸ்!!!

ஜி-23 கூட்டம்:

காங்கிரஸ் கட்சியின் ஜி-23 தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இதில் மணீஷ் திவாரி, பிருத்விராஜ் சவான், பூபேந்திர சிங் ஹூடா உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். ஜி-23 அமைப்பு தலைவர் பதவிக்கு வேட்பாளர்களையும் நிறுத்தலாம் என்று கூறப்படுகிறது. 

கெலாட்டின் நிலை?:

டெல்லியில் உள்ள ஜோத்பூர் இல்லத்தில் நேற்று அசோக் கெலாட்டை சந்தித்து பேசியுள்ளார் ஆனந்த் சர்மா.  அதற்கு முன்னதாக, டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்த கெலாட், கடந்த காலங்களில் ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்வுகளுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார் அசோக் கெலாட். மறுபுறம், ராஜஸ்தான் முதலமைச்சர் பதவி குறித்து இன்னும் 2 நாட்களில் முடிவெடுப்பதாக காங்கிரஸ் மேலிடமும் கூறியுள்ளது. இதனால் கெலாட்டின் அரசியல் எதிர்காலம் குறித்தும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

மேலும் தெரிந்துகொள்க:   முட்கள் நிறைந்த கிரீடத்தை ஏற்க தயங்கும் அசோக் கெலாட்!!!

தலைவர் தேர்தலில் யார்? யார்?:

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் திக்விஜய் சிங், மல்லிகார்ஜுன் கார்கே, சசி தரூர், மணீஷ் திவாரி உள்ளிட்டோரும் போட்டியிடுகின்றனர். திக்விஜய் சிங் காங்கிரஸின் தேர்தல் ஆணையத்திடம் இருந்து வேட்புமனுவுடன் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதன் பிறகு கார்கேவும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. தானும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தரூர் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். இப்போது ஜி-23 யும் களத்தில் இறங்கினால், மோதல் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 

மல்லிகார்ஜூன கார்கே:

காந்தி குடும்பத்தினரின் ஆதரவுடன் மல்லிகார்ஜுன் கார்கே இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைவர் பதவிக்கு காங்கிரஸ் பட்டியல் இன துருப்பு சீட்டை விளையாடலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் ஆக்கியதற்கான மத்திய அரசின் அரசியல் தந்திரங்களுக்கு பதிலடி தரும் வகையில் பட்டியல் இனத்தவர் ஒருவரை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளதாக தெரிகிறது. கார்கே தவிர மீரா குமார், முகுல் வாஸ்னிக், குமாரி செல்ஜா ஆகியோரின் பெயர்களும் செய்திகளில் இடம்பிடித்ததற்கு இதுவே காரணம் என்றும் விமர்சகர்கள் கூறியுள்ளனர். 

வேட்புமனு தாக்கல் முதல் முடிவுகள் வரை:

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். மாலைக்குள் வேட்பு மனுவின் நிலை தெரியவரும். எனினும், இறுதிவரை போட்டியில் யார் இருப்பார்கள் என்பது, வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான அக்டோபர் 8ஆம் தேதி முடிவு செய்யப்படும். இறுதி வேட்பாளர் பட்டியல் அக்டோபர் 8ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும். அதன் பிறகு, தேவைப்பட்டால் அக்டோபர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அதன்பின், அக்டோபர் 19-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். மாநில காங்கிரஸ் கமிட்டிகளின் 9,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் தலைவர் பதவிக்கான தேர்தலில் வாக்களிப்பார்கள்.

                                                                                                                  -நப்பசலையார்

இதையும் படிக்க: பாஜகவிடமிருந்து காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன??!!