தமிழ்நாடு

வாக்காளர்களின் தரவுகள் விற்பனையாகிறதா...? முற்றுப்புள்ளி வைத்த தேர்தல் அலுவலர்!

Tamil Selvi Selvakumar

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களின் தரவுகள் விற்பனையாக வாய்ப்பில்லை என தேர்தல் அலுவலர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று,வீதி வீதியாக சென்று, வாக்காளர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமடைந்து இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில்,  கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனியார் நிறுவனம் சார்பில் வாக்காளர்களுடைய தரவுகள்,  அலைபேசி எண்கள், விற்பனையாகி இருக்கிறது என ஆதாரம் இல்லாத தகவல் வெளியாகி இருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியான நிலையில், தேர்தல் ஆணையமும் அது போன்ற விவரம் வெளியாக வாய்ப்பில்லை என ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தது..

இந்த தகவல் ஈரோடு இடைத்தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த புகார் தொடர்பாக பதில் அளித்துள்ள தேர்தல் அலுவலர் சிவகுமார், வாக்காளர்களின் தரவுகள் விற்பனையாக வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். 

இதனிடையே, வழக்கறிஞர் சூரியமூர்த்தி என்பவர் அளித்த தரவு விற்பனை புகார் மீது தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை பேரில், விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.