திமுக முன்னாள் அமைச்சர் திடீர் மரணம்...சோகத்தில் திமுக உடன் பிறப்புகள்!

திமுக முன்னாள் அமைச்சர் திடீர் மரணம்...சோகத்தில் திமுக உடன் பிறப்புகள்!
Published on
Updated on
1 min read

திமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.என்.எம்.உபயதுல்லா மாரடைப்பால் இன்று மரணம் எய்தினார். அந்நாரின் உடலுக்கு திமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திமுகவின் முன்னாள் அமைச்சரும், திமுகவின் மூத்த தலைவரும், திமுகவின் தற்போதைய வர்த்தகர் அணி தலைவருமான  எஸ்.என்.எம்.உபயதுல்லா, திராவிடக் கொள்கையில் தீவிரப் பற்றுக்கொண்டவர். தஞ்சாவூர் கல்லுக்குளம் பகுதியை சேர்ந்த உபயதுல்லா, அதே தொகுதியில் போட்டியிட்டு 4 முறை சட்டமன்ற உறுப்பினராக (எம்.எல்.ஏவாக) வெற்றி பெற்றவர். 1989, 1996, 2001, 2006 ஆகிய நான்கு தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஒரே தொகுதியில் கோலோச்சி வந்தவர். தொடர்ந்து 2006 - 2011 ஆண்டு வரை திமுக ஆட்சிக்காலத்தில் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் வணிகவரித்துறை அமைச்சராக பணியாற்றினார். 

இப்படி திராவிடக் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர், 27 ஆண்டுகள் தஞ்சாவூரின் திமுக நகரச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். தொடர்ந்து திமுக மாநில வர்த்தகர் அணி தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். இதன்மூலம் தஞ்சை மாவட்ட திமுகவில் தவிர்க்க முடியாத ஒரு முக்கியத் தலைவராக விளங்கினார்.

கட்சிக்குள் குறள் நெறி செல்வராக அழைக்கப்பட்ட இவர், கடந்த 2020 ஆண்டு கலைஞர் விருது பெற்றிருந்த நிலையில், சமீபத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பேரறிஞர் அண்ணா விருதை உபயதுல்லாவுக்கு , முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது. 

 கட்சியின் கொள்கைகளில் ஏற்பட்ட தீவிரப்பற்றால் திமுகவில் நீண்ட நாள் பணியாற்றி வரும் உபயதுல்லா, இன்று திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இவருடைய மறைவு திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், அந்நாரின் மறைவுக்கு திமுக உடன்பிறப்புகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com