தமிழ்நாடு

இந்தியால் தமிழை அழிக்க நினைத்தவர்...அது முடியாது என்பதை உணர்ந்தார் - வைகோ பேட்டி!

Tamil Selvi Selvakumar

தரம் தாழ்த்தி பேசுவதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை  மிஞ்ச முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார். 

கரூர் மாவட்டம் குளித்தலையில் மதிமுக மாணவரணி மாநில செயலாளர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தரம் தாழ்ந்து பேசுவதில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை மிஞ்ச முடியாது, இன்று ஒரு பேச்சு; நாளை அதை மறுத்து பேசுபவர் என்று விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாட்டிற்கு வந்து தமிழை அழித்து விடலாம் என்று நினைத்து பேச ஆரம்பித்த ஆளுநர், இந்தியால் தமிழை ஒன்றும் செய்ய முடியாது என்பதை தெரிந்து கொண்டு தற்போது மூக்கறுப்பட்டு போய் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக முதலமைச்சர் சொல்வதை கேட்கும் நிலைமைக்கு தற்போது தமிழக ஆளுநர் வந்துள்ளதாகவும், அதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தினமும் ஏதோ ஒன்றை பேசி வருகிறார், ஆனால் அவராலும் தற்போது வரை எதையும் நிரூபிக்க முடியவில்லை என்றும் கூறினார்.

அதேசமயம், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாள்தோறும் திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார், அதில் வெற்றியும் காண்கிறார் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், வரும் மதிமுக பொதுக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் குறித்து அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.